7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் ‘தர்பார்’

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தை, லைகா புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ஒரு வாரம் முன்கூட்டியே, ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. அதற்குமுன் ஜனவரி 8-ந் தேதி அமெரிக்காவில் பிரீமியர் ஷோ திரையிடப்படுகிறது. ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை தர்பார் ரிலீசாவதால் வேறு எந்த படமும் இதுவரை ரிலீஸ் அறிவிப்பை வெளியிடவில்லை. தர்பார் தனியாக வெளியாவதால் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. தர்பார் படம் உலகம் முழுக்க 7 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

இதுகுறித்து லைகா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் புரடியூசர் சுந்தர்ராஜன் கூறியதாவது:- இதுவரை இந்திய படங்களிலேயே இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக படம் உருவாகி இருக்கிறது. ரஜினி சாரை 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே உற்சாகம் நமக்கு கிடைக்கும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது. காமெடி, ஆக்‌‌ஷன், வேகம், ஸ்டைல் என்று ரஜினி கலக்கி இருக்கிறார். பெண்களுக்கும் இது முக்கியமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு செண்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

ரஜினி, முருகதாஸ் இருவருக்கும் இது பெரிய பிளாக்பஸ்டராக அமையும். படத்தை விளம்பரப்படுத்த மட்டும் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. இதுவும் ஒரு சாதனை தான். உலகம் முழுக்க 7 ஆயிரம் தியேட்டர்களிலும் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்தது போல் நடித்துள்ளார். அந்த காட்சிகள் பயங்கரமாக இருக்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools