X

80 வது சுதந்திர தினம் – பிரதமர் மோடி செங்கோட்டையில் 13 வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார்

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 13-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார். அதற்கு முன்பாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவருக்கு, செங்கோட்டை வந்தடைந்ததும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

முப்படை மற்றும் டெல்லி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக முதல்முறையாக செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம் இசைக்கப்பட, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டு, முப்படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும் நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்நிகழ்விற்காகச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பக் கண்காணிப்பு வசதியுடன் 1,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் சவால்களைக் கடந்து உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாடு விரைந்து வளர்ந்த நாடாக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.