தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட 70,674 போலி புத்தகங்கள் கண்டறிந்து அகற்றப்பட்டுள்ளதாக நூலகத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு அண்மையில் முதலமைச்சரால் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் இருப்பதாகவும், நூலாசிரியர் பெயர்கள் போலியானவை எனவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய தீவிரக் குற்றச்சாட்டுகளையடுத்து இந்த மாநில அளவிலான சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கோவையைப் போலத் தென்காசி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நூலகங்களிலும் ஆயிரக்கணக்கான போலி நூல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களின் பெயர்களில் போலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகங்களின் மொத்த மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என ஆரம்பகட்ட மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.
அரசே போலி நூல்களைக் கொள்முதல் செய்ததற்குக் காரணமானவர்கள் யார், இதன் பின்னணியில் உள்ள லஞ்ச ஊழல் வலையமைப்பு எத்தகையது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென எழுத்தாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.