மும்பை மாநகராட்சிக் (BMC) கட்டுப்பாட்டில் உள்ள ஃபேஷன் ஸ்ட்ரீட் பகுதியில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘பிங்க் டாய்லெட்’ (Pink Toilet) எனப்படும் நடமாடும் கழிப்பறைப் பேருந்து, சட்டவிரோதமாக உணவகமாக மாற்றப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘சுவச் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் பழைய பேருந்துகளை உருமாற்றி, பெண்களுக்கான பிரத்யேகக் கழிப்பறை, பாலூட்டும் அறை மற்றும் சானிட்டரி நாப்கின் வழங்கும் வசதிகளுடன் இவை பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால், கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்தப் பேருந்தின் ஒரு பகுதி சிற்றுண்டிகள் விற்கும் ‘ஃபுட் ட்ரக்’ போலச் செயல்பட்டு வந்ததும், அதன் அருகிலேயே உணவுகள் தயாரிக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பணயம் வைக்கும் இந்தச் செயல் குறித்துப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த உணவகத்தை அதிரடியாக மூடினர். பெண்களுக்கான அடிப்படை வசதிகளை வணிக லாபத்திற்காகச் சிதைத்த இந்தச் சம்பவம், மும்பையில் பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.