X

ஆசியாவிலேயே முதல் முறையாக அரியவகை பெருநாடி-தமனி அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் பெருந்தமனி வீக்கத்திற்கு வெற்றிகர அறுவைசிகிச்சை! – சிம்ஸ் மருத்துவமனை சாதனை

மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆசியாவிலேயே முதல் முறையாக மிகப்பெரிய பெருநாடி-தமனி அழற்சி (‘அயோர்டோஆர்டெரிடிஸ்’) எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளவயது நோயாளிக்கு பெருந்தமனியில் ஏற்பட்ட மிகப்பெரிய வீக்கத்தைச் சரிசெய்யும் அறுவைசிகிச்சையை சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது.

மூச்சுத் திணறல் மற்றும் அதிக இதயத் துடிப்பு ஆகிய பாதிப்புகளுடன் மிக ஆபத்தான நிலையில் இச்சிறுவன் எமது மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டான். சிறுவனால் படுத்து உறங்கக் கூட முடியாத நிலை இருந்தது. பெருந்தமனியில் ஏற்பட்டிருந்த வீக்கம் வெடித்தால் உயிரிழப்பு ஏற்படும் இடர்வாய்ப்பு இருந்ததால், அவசரகால அடிப்படையில் இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. உடலின் மிகப்பெரிய இரத்தக் குழாயான பெருந்தமனி மிகவும் வீங்கியிருந்ததால், நெஞ்சுப் பகுதியிலேயே அதன் துடிப்பைப் பார்க்க முடிந்தது; இது பார்ப்பவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

சிறுவனைப் பரிசோதித்த உடனேயே தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டோம். அதில், மார்புப் பகுதி பெருந்தமனியில் மிகப்பெரிய வீக்கம் இருப்பதும், அது பெருநாடி-தமனி அழற்சி (‘அயோர்டோஆர்டெரிடிஸ்’) அல்லது ‘டகாயாசு ஆர்டெரிடிஸ்’ எனப்படும் அரியவகை நோயால் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பால் இரத்தக் குழாய்கள் தடித்து, சில நேரங்களில் பலூன் போல வீக்கமடையும். நோய் தீவிரமான நிலையில் இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு இச்சிறுவனைத் தயார்படுத்தும் விதமாக முடக்குவாதவியல் துறைக்குப் பரிந்துரைத்தோம்.

இரத்தக் குழாய்களில் வீக்கம் மற்றும் அழற்சி இருக்கும்போது அறுவைசிகிச்சை செய்வது அதிகப்படியான இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்பதோடு, மருத்துவ ரீதியாகவும் மிகவும் சவாலானது. எனவே, அறுவைசிகிச்சைக்கு முன்பாக மருந்துகள் மூலம் சிறுவனின் உடல்நிலையைச் சீராக்க வேண்டியிருந்தது. ‘டகாயாசு ஆர்டெரிடிஸ்’ நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவது மிகவும் அரிதானது. பெருந்தமனி வீக்கத்திற்கான அறுவைசிகிச்சைகளில் சுமார் எமது 40 ஆண்டுக்கால அனுபவத்தில், நாங்கள் சிகிச்சை அளித்த மிகக் குறைந்த வயதுடைய நோயாளி இச்சிறுவன் தான்.

அறுவைசிகிச்சை செயல்முறை: பெருந்தமனியில் ஏற்பட்டிருந்த வீக்கம் மார்பெலும்புக்கு மிக அருகில் இருந்ததால், வழக்கமான முறையில் மார்பைத் திறந்தால் பெருநாடியில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்கக்கூடும். இதன் காரணமாக, முதலில் தொடையின் இடுக்குப் பகுதியில் உள்ள தமனி மற்றும் சிரையில் சிறிய துளையிட்டு, சிறுவனை ‘இதய-நுரையீரல் இயந்திரத்துடன்’ இணைத்தோம். சிறுவன் சுமார் 18 கிலோ எடை மட்டுமே இருந்ததால், மிகவும் நுண்ணிய குழாய்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

அதன் பிறகு, ‘டீப் ஹைபோதெர்மிக் சர்குலேட்டரி அரெஸ்ட்’ எனப்படும் மருத்துவ முறையின் மூலம் சிறுவனின் உடல் வெப்பநிலையைச் சுமார் 16 டிகிரி செல்சியஸுக்குக் குறைத்தோம். மருந்துகள் செலுத்தி இதயத் துடிப்பை நிறுத்தியதோடு, உடலின் அனைத்துப் பகுதிகளுக்குமான இரத்த ஓட்டத்தையும் சுமார் 40 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தினோம். அந்த இடைவெளியில், பெருந்தமனியைத் திறந்து, பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு ‘டாக்ரான் கிராஃப்ட்’ எனப்படும் செயற்கை இரத்தக் குழாயைப் பொருத்தி தையலிட்டோம்.

அறுவைசிகிச்சை முடிந்ததும், தையலிட்டு இரத்த நாள வீக்கம் இருந்த பகுதியை அகற்றிச் சரிசெய்தோம். இதய-நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன் சிறுவனின் உடல் வெப்பநிலையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து, இயந்திரத்திலிருந்து அப்புறப்படுத்தினோம். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுவன், மிக விரைவாகக் குணமடைந்து 9-வது நாளில் நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினான்.

“தற்போது தங்களது மகன் முற்றிலும் மாறுபட்ட புதிய குழந்தையாகத் திகழ்வதாகவும், தனது வழக்கமான அன்றாடச் செயல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அவனது பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இப்போது அவனால் எவ்வித சிரமமும் இன்றி நடக்கவும், மூச்சுத் திணறல் இன்றி நன்றாக உறங்கவும் முடிகிறது.”

இருப்பினும், நோய் மீண்டும் தீவிரமடைவதையும், பெருந்தமனியின் மற்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படுவதையும் தடுக்க அவன் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதய மற்றும் நுரையீரல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பாஷி V. வேலாயுதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இக்குழுவில் இதய மற்றும் நுரையீரல் அறுவைசிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் முகமது இத்ரீஸ் உடனிருந்தார்; மயக்கவியல் பிரிவு மூத்த ஆலோசகர்களான டாக்டர் அஜு ஜேக்கப் மற்றும் டாக்டர் அருண் குமார் ஆகியோர் மயக்கவியல் தொடர்பான ஒத்துழைப்பை வழங்கினர். மேலும், அறுவைசிகிச்சையின் போது உதவுவதற்கான அறுவைசிகிச்சை அரங்கு செவிலியர்கள், இதய-நுரையீரல் இயந்திரத்தை இயக்கும் ‘பெர்ஃப்யூஷனிஸ்ட்’ மற்றும் மயக்கவியல் குழுவிற்கு உதவும் அறுவைசிகிச்சை அரங்குத் தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

சிம்ஸ் மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் அறுவைசிகிச்சைப் பிரிவு இயக்குநர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் பாஷி வி. வேலாயுதன் கூறுகையில், “மிகவும் அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையுடன் வந்த இச்சிறுவனை வெற்றிகரமாகக் காப்பாற்ற முடிந்தது எங்களுக்கு மனநிறைவையும், பெருமிதத்தையும் தருகிறது. ஒரு குழந்தைக்கு ஏறு பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வளைவு ஆகியவற்றை மாற்றுவது என்பது மிகவும் சவாலான காரியமாகும். ஏனெனில், பாதிக்கப்பட்ட பெருந்தமனிப் பகுதிகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக கிராஃப்ட் பொருத்துவதற்கு வசதியாக இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதுதான் இந்த சிகிச்சையின் மிக முக்கிய அம்சமாகும். இந்த காலகட்டத்தில் மூளை, சிறுநீரகங்கள், குடல் மற்றும் தண்டுவடம் போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க, இதய நுரையீரல் பைபாஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி சிறுவனின் உடல் வெப்பநிலையை 16°C நிலைக்கு வருமாறு குளிரூட்டினோம். இது உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும், ஆக்ஸிஜன் தேவையையும் கணிசமாகக் குறைக்கிறது. பெருந்தமனியை மறுசீரமைக்கும் பணியைச் செய்யும் போது சுமார் 40 நிமிடங்களுக்கு இரத்த ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அதன் பிறகு மீண்டும் மிகவும் கவனமாகச் சீரமைக்கப்பட்டது. அதே நேரத்தில் அறுவைசிகிச்சை நடைபெற்ற நேரம் முழுவதும் முக்கிய உடல் உறுப்புகள் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்தோம்,” என்றார்.

சிம்ஸ் மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் முகமது இத்ரீஸ் கூறுகையில், ” பேசுகையில், “இதய – மார்பறை அறுவைசிகிச்சையில் இது ஒரு பெருமைக்குரிய தருணம். இது எமது மருத்துவக் குழுவின் அறுவைசிகிச்சை நிபுணத்துவத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும். எமது மருத்துவர்களின் சாதனை சாதாரணமானதல்ல. வீட்டின் பிரதான குழாயில் ஏற்படும் ஒரு பெரிய பழுதைச் சரிசெய்ய முழு வீட்டிற்கான தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்திவைப்பதைப் போன்றதே இதுவாகும். இந்த சிகிச்சையில், உடலுக்கான இரத்த ஓட்டத்தை நாங்கள் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது, அதே நேரத்தில் அறுவைசிகிச்சை நடைபெற்ற நேரம் முழுவதும் முக்கிய உடல் உறுப்புகள் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்தோம். சுமார் 40 நிமிடங்களுக்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்ட அந்த நேரத்தில் மூளை, சிறுநீரகங்கள், குடல் மற்றும் தண்டுவடம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. மறுசீரமைக்கப்பட்ட பெருந்தமனியும் அதன் கிளைகளும் நன்றாகச் செயல்படுகின்றன. செயல்முறையின் சிக்கலான தன்மையையும், குழந்தையின் சிறிய வயதையும் கருத்தில் கொள்ளும்போது, சிகிச்சையின் பலன் மிகச்சிறப்பானதாகும்,” என்று கூறினார்.

மயக்கவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அருண் குமார் இது குறித்துக் கூறுகையில், “சிறுவனுக்கு மயக்கமருந்து அளிப்பதிலும் கூடுதல் சவால்கள் இருந்தன. மயக்கமருந்து செலுத்துவதற்கு முன்பாகவே சிறுவனின் இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்ததோடு, அதனைக் கட்டுப்படுத்துவதும் கடினமாக இருந்தது; இது சிகிச்சை நடைமுறையை மேலும் சிக்கலாக்கியது. மேலும், சிறுவனின் சிறிய உடல்வாகு மற்றும் அறுவைசிகிச்சைக்கு முந்தைய ‘ஸ்டீராய்டு’ மருந்துச் சிகிச்சையால் திசுக்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் காரணமாக, சுவாசப் பாதையைப் பாதுகாப்பதும், மூச்சுக்குழாயில் குழாய் பொருத்துவதும் தொழில்நுட்ப ரீதியாக மிகுந்த சவாலானதாக இருந்தது” என்றார்.

இந்த சாதனை குறித்து எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில், “அறுவைசிகிச்சைத் துறையில் இந்த ஒரு குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது. மருத்துவச் சேவையின் எல்லைகளை விரிவுபடுத்துவதிலும், அதிநவீன மற்றும் சிக்கலான சிகிச்சைகளை தேவைப்படும் நோயாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதிலும் சிம்ஸ் மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது. ஒரு குழந்தைக்கு இத்தகைய அரிய மற்றும் சிக்கலான அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து, ஆசியாவிலேயே முதல்முறையாக இதைச் சாதித்திருப்பது எங்கள் மருத்துவக் குழுக்களின் நிபுணத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சிகளுக்குச் சான்றாகும். எமது நோயாளிகளுக்குச் சாத்தியமான சிறந்த தீர்வுகளை வழங்குவதில் எங்களின் சிறப்பான பணி இனியும் தொடரும்,” என்று தெரிவித்தார்.