X

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தாக்கல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை ஜூன் 22-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

குதிரை பேரம் மூலமாக கட்சி தாவிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்று, அந்த நான்கு தொகுதிகளும் காலியாக இருப்பதாக சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான இன்பதுரை தனது எக்ஸ் தளப் பதிவில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திடீர் சட்டப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி இடைத்தேர்தல் நடக்குமா என்ற பலத்த விவாதங்களும், பரபரப்பும் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.