X

அமுல், மதர் டெய்ரி பால் விற்பனை விலை உயர்வு! – பால் முகவர்கள் சங்கம் வரவேற்பு

அமுல் மற்றும் மதர் டெய்ரி பால் விற்பனை விலை உயர்வை வரவேற்று, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பால் கொள்முதல், கால்நடை தீவனங்கள் விலை மற்றும் உற்பத்திக்கான செலவினங்கள் உயர்வு காரணமாக இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனமான அமுல், மதர் டெய்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் தவிர்க்க இயலாத சூழலில் பால் விற்பனை விலையை உயர்த்தியுள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது.

ஏனெனில் தோல்கட்டி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகளால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பருவமழை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளாலும் இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பால் நிறுவனங்கள் ஆரோக்யமாக இயங்குவதற்கு இந்த சிறு விற்பனை விலை உயர்வு என்பது மிகவும் அவசியமாகிறது.

மேலும் அமுல், மதர் டெய்ரி, நந்தினி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களில் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படாமல் பொதுமக்கள் நலனோடு பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் நலனையும் கவனத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை, உற்பத்தி செலவினங்களுக்கேற்ற வகையில் விற்பனை விலையையும், பால் பொருட்கள் விற்பனைக்கான கமிஷன் தொகையையும் உயர்த்தி வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் மட்டும் பல ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவது உள்ளபடியே வருத்தமளிக்கிறது.

அதுமட்டுமின்றி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை விலையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு மறைமுகமாக உயர்த்திய நிலையில் அதன் பலனை பால் உற்பத்தியாளர்களுக்கோ, பால் முகவர்களுக்கோ வழங்கிட வழிவகை செய்யவில்லை.

எனவே அமுல், மதர் டெய்ரி, நந்தினி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனமும் சுயமாக செயல்பட்டு, பொதுமக்கள் நலனோடு பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் நலனையும் கவனத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை, பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை விலையை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் நேரடியாக உயர்த்தி ஆவின் நிறுவனம் சிறப்பான முறையில் செயல்பட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் ஆவண செய்திட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு, ஆவினுக்கான பால் கொள்முதல் விலை, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கான கமிஷன் தொகை உயர்த்தி ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான விற்பனை விலையையும் உயர்த்திட முன்வரும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.