இந்திய தீவிர சிகிச்சை மருத்துவ சங்கம் (ISCCM), காவேரி மருத்துவமனைகள் மற்றும் ஐஐடி மெட்ராஸ் (IIT-M) ஆகியவை இணைந்து, ‘தீவிர சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டாதான் 2026’ நிகழ்வை வெற்றிகரமாக நடத்தின. சென்னையில் நடைபெற்ற ISCCM-இன் 32-வது ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக அமைந்த இந்நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தரவு அறிவியல் நிபுணர்களை ஒருங்கிணைத்தது.
பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த AI டேட்டாதான், தீவிர சிகிச்சை மருத்துவர்களும் தரவு அறிவியலாளர்களும் இணைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஏற்படும் சவால்களுக்குத் தீர்வு காணும் முதல் முயற்சியாகும்.நோயாளிகளின் தொடர் கண்காணிப்புத் தரவுகள், பரிசோதனை முடிவுகள் மற்றும் ஸ்கேன் பதிவுகளைப் பயன்படுத்தி, சீழ்பிடித்தல் (செப்சிஸ்), ஷாக், தீவிர சிறுநீரக பாதிப்பு மற்றும் சுவாசக் கோளாறு போன்ற சிக்கலான நேரங்களில் சிறந்த மருத்துவ முடிவுகளை எடுக்க உதவும் புதிய மாதிரிகளைப் பங்கேற்பாளர்கள் உருவாக்கினர்.
நவீன மருத்துவத்தில், தீவிர சிகிச்சை பிரிவில்தான் நோயாளிகளின் தரவுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து மாறும் இந்த தரவுகளின் அடிப்படையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பல்வேறு துறை நிபுணர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த தரவுகளை எப்படி நடைமுறைக்கேற்ற சிறந்த மருத்துவ தீர்வுகளாக மாற்றலாம் என்பதை இந்த டேட்டாதான் நிரூபித்துக் காட்டியது. இது அவசர காலங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவும்.
உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். கிளீவ்லேண்ட் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் பியூஷ் மாத்தூர் மற்றும் மாயோ கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் இந்த பயிற்சியின் இயக்குநர்களாகவும், டாக்டர் பரத் ஜகிசாய் தேசிய அளவிலான தலைவராகவும் செயல்பட்டனர்.
.ஐஐடி மெட்ராஸ் – ன் இயக்குநர் பத்மஸ்ரீ வி. காமகோடி கூறியதாவது: ” “மருத்துவத் துறையில் தீவிர சிகிச்சை என்பது மிகவும் சவாலான, அதிக தகவல்களைக் கையாள வேண்டிய ஒரு பிரிவாகும். தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகள் பெரும்பாலும்தங்கள் பிரச்சனைகளைச் சொல்ல இயலாத நிலையில், சுயநினைவின்றி இருப்பதால், மருத்துவக் கருவிகள் காட்டும் அளவீடுகளை மட்டுமே நம்பி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்தத் தரவுகளை வைத்து மட்டுமே நோயை முன்கூட்டியே கணிப்பதும், புரிந்துகொள்வதும் மிக முக்கியம். இதற்காக, மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் ஒன்றாக இணைக்கும் இந்த முயற்சி மிகவும் அவசியமானது. நோயை எளிதாகக் கண்டறியவும், சரியான மருத்துவ முடிவுகளை எடுக்கவும் நவீன தொழில்நுட்பம் எப்படி உதவும் என்பதை இந்த ‘டேட்டாதான்’ தெளிவாக உணர்த்தும்.”
ISCCM AI டேட்டாதான் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீதர் நாகையன் கூறுகையில், “”உலகெங்கும் உள்ள தீவிர சிகிச்சை நிபுணர்களையும் ஐஐடி மெட்ராஸின் தரவு அறிவியல் நிபுணர்களையும் ஒருகூரையின் கீழ் இந்நிகழ்வு கொண்டு வந்துள்ளது. உண்மையான மருத்துவ தரவுகளைக் கொண்டு, அன்றாட மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்ப மாதிரிகளை இவர்கள் உருவாக்கி வருகின்றனர்.”
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மருத்துவமும் தரவு அறிவியலும் இணைந்து செயல்படுவதை இந்த டேட்டாதான் பிரதிபலிக்கிறது. நோயாளிகளின் நலனுக்காகத் தொழில்நுட்பங்களை முன்கூட்டியே பயன்படுத்துவதில் எப்போதும் முன்னிலையில் காவேரி மருத்துவமனைஉள்ளது. ஆம்புலன்ஸ் முதல் தீவிர சிகிச்சை பிரிவு வரை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆபத்தான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துத் தவிர்க்கிறோம். இதன் மூலம் ஆபத்தான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து குறைக்க முடிகிறது. அன்றாடப் பதிவுப் பணிகளை AI எளிதாக்குவதால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் நோயாளிகளின் கவனிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது,” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் எஸ். மணிவண்ணன் கூறுகையில், “மருத்துவ சேவையை, குறிப்பாக அவசர கால முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவை, செயற்கை நுண்ணறிவு (AI) படிப்படியாக மாற்றி வருகிறது. AI தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், மருத்துவ நிறுவனங்களும் அதற்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் வேண்டும். காவேரிமருத்துவமனையில், மருத்துவத்தில் மனிதத்தன்மையை இழக்காமல், அதே சமயம் மருத்துவர்களுக்கு உதவும் மற்றும் நோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்தும் AI சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளோம்,” என்றார்.
இந்த டேட்டாதானைத் தொடர்ந்து, ‘கிரிட்டிகேர் 2026’ (Criticare 2026) மாநாட்டில் தீவிர சிகிச்சையில் AI-இன் பங்கு குறித்து நிபுணர்களின் விவாதங்கள் மற்றும் அறிவியல் பயிலரங்குகள் நடைபெற்றன. தினசரி தீவிர சிகிச்சை நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவை இணைப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது.