திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ (Enrica Enterprises Private Limited) நிறுவனத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், அந்நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்களில் இயற்கை சார்ந்த மற்றும் செயற்கை சுவையூட்டிகள் (Natural Identical and Artificial flavoring Substance) சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது, இதை அடுத்து, அந்நிறுவனத்தின் 11 மதுபான வகைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டாஸ்மாக் (TASMAC) நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி விஎஸ்ஓபி எக்ஸா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 பிராண்டுகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த தடை வாபஸ் பெறப்பட்டு மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.
தடை விதிக்கப்பட்ட அடுத்த ஓரிரு நாட்களிலேயே (14.08.2026) FSSAI தனது தடையை வாபஸ் பெற்றதாகக் கூறி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை ஆணையர் ஆர். கஜலட்சுமி ஐ.ஏ.எஸ். அந்த 11 வகை மதுபானங்களுக்கும் விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கி விற்பனைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடுமையான கண்டனத்தையும் எழுப்பியுள்ளது.