டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பள்ளி வேலை நேரத்தின் போது ரீல்ஸ் (Reels) அல்லது குறுகிய வீடியோக்களை எடுக்க டெல்லி கல்வி இயக்குநரகம் (DoE) அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
பள்ளிகளில் கல்வி கற்கும் சூழலைப் பாதுகாக்கவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும், கல்வி நிறுவனங்களின் கண்ணியத்தைக் காக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு நோக்கத்திற்காகப் பள்ளி வளாகத்திற்குள் வீடியோக்கள் எடுக்கப்படுவதால் மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், கல்வி சார்ந்த அல்லது விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்களை முறையான அனுமதி பெற்று, ஒரு ஆசிரியரின் மேற்பார்வையில் மட்டும் எடுக்கலாம் எனத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.