மருத்துவ பராமரிப்பு தரத்தில் இந்தியாவின் முன்னணி மாநாடான CAHOCON 2026-ன் 10-வது மாநாடு, 2026 ஏப்ரல் 10 முதல் 12 வரை சென்னையில் நடைபெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO) நடத்தும் இந்நிகழ்வில், நோயாளிகளின் பாதுகாப்பு, மருத்துவ தரம், அங்கீகாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்து விவாதிக்க, 200-க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,500 மருத்துவத் துறை தலைவர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
தொழில்நுட்பம். தொடர்பு. நம்பிக்கை – புதிய சுகாதாரக் குறியீடு’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தை மேம்படுத்துவதில் மானுட பிணைப்பு, நம்பகத்தன்மை மற்றும் புத்தாக்க செயல்பாடு ஆகியவற்றை CAHOCON 2026 முன்னிலைப்படுத்துகிறது. இந்த மாநாட்டின், சிறந்த அறிவியல் அமர்வுகள், குழு விவாதங்கள், புதுமைக் கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்களுடன், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் புதுமையான திட்டங்களை முன்னிலைப்படுத்தும் சுவரொட்டி விளக்கக்காட்சிகளும் இடம்பெறும்.
மாநாட்டோடு சேர்ந்து, முன்னணி மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள், டிஜிட்டல் சுகாதார நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் நவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தும் சுமார் 150 அரங்குகளைக் கொண்ட ஒரு மாபெரும் சுகாதார கண்காட்சியும் நடைபெறும். மேலும், சிறிய குழு விவாதங்கள், ஊடாடல் முறையிலான பயிலரங்குகள் மற்றும் கற்றல் அமர்வுகளை ஏதுவாக்கும் வகையில் மூன்று தனித்தனி அரங்குகளும் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன.
சர்வதேச மருத்துவத் தர அமைப்பான ISQua-வால், தெற்காசியாவின் முதல் ISQua பிராந்திய மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள CAHOCON 2026-ல், 20 ISQua வல்லுநர்களின் சிறப்புரைகள் இடம்பெறும். மருத்துவத் தரத்தை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களைக் கௌரவிக்கும் விதமாக மதிப்புமிக்க ‘CAHO விருதுகள்’ இந்த மாநாட்டில் நிகழும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு முந்தைய பயிற்சி பயிலரங்குகளில் சென்னையின் 32 முன்னணி மருத்துவமனைகளின் நிபுணர்கள் பங்கேற்று, தர மேம்பாடு மற்றும் நோயாளி பாதுகாப்பு குறித்த செயல்முறைப் பயிற்சி மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்கவிருக்கின்றனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் CAHO-வின் தலைவர் டாக்டர். விஜய் அகர்வால் பேசுகையில், “கடந்த பத்தாண்டுகளில், இந்தியா முழுவதும் சுகாதாரத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு ஆற்றல் மிக்க தேசிய இயக்கமாக CAHO வளர்ந்திருக்கிறது. தொடர்ச்சியான பயிற்சி, அங்கீகாரம் பெறுவதற்கான ஆதரவு, அறிவுப் பகிர்வுத் தளங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், மருத்துவச் சேவையின் ஒவ்வொரு அம்சத்திலும் தரமும் பாதுகாப்பும் இருக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்க நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்,” என்றார்.
CAHO-வின் பொதுச் செயலாளரும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் தர மேலாளருமான டாக்டர். லல்லு ஜோசப் கூறுகையில்: “இந்தியாவில் சுகாதாரத் தரம் மற்றும் நோயாளி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான தளங்களில் ஒன்றாக CAHOCON வளர்ந்துள்ளது. பாதுகாப்பான மற்றும் உயர்தரமான சிகிச்சை நோயாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய சுகாதார அமைப்புகளே தொடர்ச்சியான மேம்பாடு என்ற கலாச்சாரத்தை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்,” என்றார்.
CAHOCON 2026-ன் அமைப்புக் குழுவின் இணை தலைவரும், காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் எஸ். மணிவண்ணன் தனது உரையில்: “நாடு முழுவதிலுமிருந்து வரும் மருத்துவர்கள், நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது அமையும். மருத்துவத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் புதிய முன்னேற்றங்களைக் ஆராய்வதற்கான அமர்வுகள் இதில் இடம்பெறும். தங்களது மருத்துவ நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய யதார்த்தமான தீர்வுகளை ஆராய்ந்தறியவும், அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பிற்கு வாய்ப்புகளை வழங்கவும், பங்கேற்பாளர்களுக்கு இந்த மாநாடு சிறந்த தளமாக இருக்கும்.” என்று கூறினார்.
CAHOCON 2026-ன் அமைப்புக் குழு செயலாளரும், மதுரை தேவதாஸ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் துணைத் தலைவருமான டாக்டர் சதீஷ் தேவதாஸ் கூறுகையில்: “சுகாதாரத்துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல அறிவியல் அமர்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெறும். இதில் பங்கேற்பவர்கள் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய திறன்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் பயிற்சி பயிலரங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
CAHOCON 2026-ன் கல்விக் குழு உறுப்பினரும், சென்னை அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி பேசுகையில்: “இந்த மாநாட்டில் முன்னணி மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சிறப்புரையாற்றவிருக்கின்றனர். சிறந்த நடைமுறைகளைத் தங்களின் சொந்த மருத்துவ நிறுவனங்களில் செயல்படுத்துவதற்கான புதிய கண்ணோட்டத்தையும், உத்வேகத்தையும் பங்கேற்பாளர்களுக்கு இவை வழங்கும்,” என்றார்.
CAHOCON 2026-ன் அமைப்புக் குழு தலைவராக கோவை மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடலின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமியும், அமைப்பு இணைத் தலைவர்களில் ஒருவராக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் குருசங்கரும் செயல்படுகின்றனர்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் FLAB ஹெல்த்கேர் – ன் திரு. அடெல் ஜே; புதுச்சேரி நியூ மெடிக்கல் சென்டர் – ன் டாக்டர். அர்ஜுன்; சங்கர நேத்ராலயாவின் டாக்டர். வி.வி. ஜெயச்சந்திரன்; சென்னை ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் திருமதி. சந்தியா செரியன்; சிம்ஸ் (SIMS) மருத்துவமனையின் டாக்டர். ராஜு சிவசாமி வி பி; ஜெம் (GEM) மருத்துவமனையின் டாக்டர். அசோகன் மற்றும் டாக்டர். பாபு நாராயணன்; சீதாபதி கிளினிக் – ன் திருமதி. காயத்ரி சந்தீப்; செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியின் டாக்டர். லாஸ்யா தம்பிதுரை; SRMC – ன் டாக்டர். சுதாகர் சிங்; சாஸ்தா ஹெல்த்கேர் சொல்யூஷன்ஸ் – ன் திரு. வெங்கட் பணிதர்; ஹெல்த்பிரிட்ஜ் கம்பெனியின் டாக்டர். ஜோதி கிளாரா; ரேலா மருத்துவமனையின் திரு. முகமது பாரூக், மற்றும் டாக்டர். முத்துஸ் மருத்துவமனையின் டாக்டர். பாலமுருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.