மத்திய அரசின் ஏழை எளிய பெண்களுக்கான பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் (PMUY) கீழ், இதுவரை பயனாளர்களுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வரை வழங்கப்பட்டு வந்த மானிய விலையிலான சிலிண்டர்களின் வரம்பு தற்போது 4-ஆக அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஒரு உஜ்வாலா பயனாளர் ஆண்டுக்குத் தனது முதல் நான்கு சிலிண்டர் ரீஃபில்களுக்கு (Refills) மட்டுமே தலா ₹300 நேரடிப் பணப்பரிமாற்ற (DBT) மானியத்தைப் பெறுவார்” என்று குறிப்பிட்டதன் மூலம் இந்தத் தகவல் மறைமுகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாட்டின் காரணமாக, ஏழை எளிய உஜ்வாலா திட்ட நுகர்வோர்கள் இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தும் பட்சத்தில், தங்களின் 5-ஆவது சிலிண்டரிலிருந்து சந்தை விலையிலேயே, அதாவது சாதாரண பொது நுகர்வோர் வாங்கும் முழுத் தொகையையும் கொடுத்து சிலிண்டர்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
முதல் 4 சிலிண்டர்களுக்குப் பிறகு அவர்களுக்குக் கிடைத்து வந்த ₹300 கூடுதல் மானியம் முற்றிலும் நிறுத்தப்படுவதால், இந்த சிலிண்டர் வரம்புக் குறைப்பு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தி பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.