சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த வரி உயர்வை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்திவைத்திருப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமல் சொத்துவரியை உயர்த்தும் அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது ?
ஏற்கனவே மறைமுக மின்கட்டண உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சாதாரண நடுத்தரக் குடும்பங்களின் வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து கூடுதல் பொருளாதார சுமையை ஏற்றுவது நியாயமல்ல
அரசின் கருவூலத்திற்குப் பெருந்தொகை வந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், அதில் இதுபோன்ற மறைமுகக் கட்டண உயர்வுகளும் அடங்குமா?
மாநகராட்சியின் இந்த நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்து, கூடுதலாக வசூலிக்கப்பட்ட சொத்துவரித் தொகையைச் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாகத் திருப்பி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.