தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மருத்துவமனைக்குச் சற்றும் எதிர்பாராத வகையில் வருகை தந்த முதலமைச்சர், அங்குள்ள அவசரச் சிகிச்சைப் பிரிவு, பச்சிளங் குழந்தைகள் வார்டு மற்றும் மருந்து விநியோக மையங்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவச் சேவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்றும், மருந்துகள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறதா என்றும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், சிகிச்சைக்கு வந்திருந்த குழந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் வசதிகள் குறித்துக் குறைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர், குழந்தைகளுக்குத் தரமான மற்றும் துரிதமான சிகிச்சைகளை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.