தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினைப் பேணி மேம்படுத்தும் நோக்கில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force) திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
கடந்த மே மாதம் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்ட முக்கியக் கோப்புகளில் ஒன்றான இத்திட்டம், கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கப்படவிருந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று அமுலுக்கு வருகிறது.
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில், பெண் ஐ.ஜி. கே.பவானீஸ்வரியின் தலைமையின் கீழ் இயங்கவுள்ள இந்த அதிரடிப்படையானது, தமிழகத்தின் 250 காவல் உள்கோட்டங்களிலும் தலா ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் என்ற பலமான கட்டமைப்போடு செயல்படவுள்ளது.
அடர் நீல நிற சட்டை, காக்கி பேண்ட் மற்றும் ‘சிங்கப்பெண்’ லோகோ பேட்ஜ் அடங்கிய பிரத்யேக புதிய சீருடையுடன் களமிறங்கும் இச்சிறப்புப் படையினர், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.