X

டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல்

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் பற்றி ஏர்போர்ட் மூர்த்தி யூடியூப்களில் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஏர்போர்ட் மூர்த்தியை காலணியால் தாக்கி சட்டையையும் கிழித்தனர்.

பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் அவர்களை திருப்பி தாக்கினார். டி.ஜி.பி. அலுவலக வாசலில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர்.

டி.ஜி.பி. அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இரு தரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பாதுகாப்புக்காக எதிர்தாக்குதலில் ஈடுபட்டார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்தது. ஏர்போர்ட் மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலைந்து சென்றனர்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பா.ம.க பிரமுகரான ம.கா. ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். அவர்களோடு செல்வதற்காகவே ஏர்போர்ட் மூர்த்தி டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போதுதான் அவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அங்கிருந்த தொலைக்காட்சியினர் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளனர். டி.ஜி.பி. அலுவலகம் அருகே ஏற்பட்ட இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடயே, எர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.