இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை பெரும்பாலான நகரங்களில் ரூ.200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த திடீர் உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்: வணிக சிலிண்டர் விலை உயர்ந்தாலும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசியாக மார்ச் 7-ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போதைய நிலவரப்படி விலையில் மாற்றம் இன்றி நீடிக்கிறது. உதாரணமாக, ஹைதராபாத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை தற்போது ரூ.965 ஆக உள்ளது.