X

உடல் நிலை பாதிப்பு ஏற்படுத்தும் ‘கோனோகார்பஸ்’ மரத்தை அகற்றிய மாநகராட்சி!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 43-வது வார்டு பக்கிள்புரம் 3-வது தெருவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். ஆய்வின் போது, அத்தெருவில் வளர்க்கப்பட்டு வரும் வெளிநாட்டைச் சேர்ந்த ‘கோனோகார்பஸ்’ என்ற மரம் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது.

இம்மரத்தால் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் போன்ற தீவிர சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறி, மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளாக இம்மரம் அங்கே இருந்து வந்த நிலையில், இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கோரிக்கையைக் கேட்டவுடன் உடனடியாகச் செயல்பட்ட மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, அதிகாரிகளை மரத்தை ஆய்வு செய்ய அனுப்பி, அதனை உடனே அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மரத்தை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிற்கு பக்கிள்புரம் 3-வது தெரு பகுதி மக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் மற்றும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.