வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தற்போது சென்னைக்கு 560 கி.மீ தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், மாணவர்கள் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்துக்கொண்டும் பள்ளிக்குச் சென்றனர்.