X

1,400 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் அதிநவீன ‘ஸ்மார்ட் எல்இடி’ விளக்குகள் அமைக்க டெல்லி அரசு நடவடிக்கை

டெல்லி பொதுப்பணித்துறை (PWD) பராமரிப்பில் உள்ள சுமார் 1,400 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கிட்டத்தட்ட 93,000 தெருவிளக்குகளை அதிநவீன ‘ஸ்மார்ட் எல்இடி’ (Smart LED) விளக்குகளாக மாற்ற டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் 473.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ், தற்போதுள்ள பழைய சோடியம் வேப்பர் மற்றும் காலாவதியான எல்இடி விளக்குகள் முற்றிலும் அகற்றப்பட்டு, வானிலைக்கு ஏற்ப ஒளிர்வை மாற்றியமைக்கும் (Dimmable) ஸ்மார்ட் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு விளக்குகளின் மாதாந்திர செயல்பாட்டுத் திறனை ஆய்வு செய்த பிறகே இஎம்ஐ (EMI) முறையில் பணம் செலுத்தப்படும் ஒரு புதிய நடைமுறையை டெல்லி அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், இருண்ட பகுதிகளை ஒளிரச் செய்ய கூடுதலாக 5,000 புதிய மின் கம்பங்கள் நடப்படவுள்ளதோடு, விளக்குகளை கண்காணிக்க பொதுப்பணித்துறை தலைமையகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு மையமும் (Centralised Command Centre) அமைக்கப்படவுள்ளது.

மின்சார நுகர்வை பெருமளவு குறைத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரையிலான மின்கட்டணச் சேமிப்பைத் தேடித்தரவுள்ள இந்த நவீனத் திட்டம், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சாலை விபத்துகளைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.