X

தேவ் – திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தேவ்’ எப்படி என்பதை பார்ப்போம்.

பணக்கார வீட்டு பையனான கார்த்திக்கு, சாகச விஷயங்களில் ஈடுபடுவதும், ஊர் சுற்றுவதும் பிடித்தமானதாக இருக்கிறது. குடும்ப தொழில் என்று ஒன்று இருந்தாலும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்து வரும் அவருக்கு, சிறு வயதில் ரொம்பவே கஷ்ட்டப்பட்டு, தனது சொந்த முயற்சியால் நல்ல நிலைக்கு வந்ததோடு, இளம் வயதிலேயே அமெரிக்காவில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் மீது காதல் வருகிறது.

கார்த்தியின் சில பல சாகங்களால் அவரது காதல் வலையில் விழும் ரகுல் ப்ரீத் சிங், ஒரு கட்டத்தில் கார்த்தி இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளாகும் நேரத்தில், கார்த்தி சில நாட்களுக்கு அவரை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், கார்த்தி மீது கோபமடையும் ரகுல் ப்ரீத் சிங், ஒரு கட்டத்தில் அவரை விட்டு பிரிய, கார்த்தியும் தடுமாற்றம் அடைய, பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பது தான் ‘தேவ்’ படத்தின் மீதிக்கதை.

எத்தனை காதல் படங்கள் வந்தாலும், காதலுக்கு இருக்கும் தனித்துவத்தால் அவை சலித்துப்போவதில்லை. அதற்கு காரணம், காதல் என்பது மட்டும் அல்ல, அந்த காதலை ஒரு திரைப்படமாக கையாளப்பட்ட முறையும் தான். அந்த வகையில், காதலை தேவ் கொண்டாடி இருந்தாலும், படம் முழுவதுமே ஏதோ குறைவது போலவே இருக்கிறது.

தேவ் என்ற வேடத்தில் ஸ்டைலிஷாக நடித்திருக்கும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பால் நம்மை கவர்ந்துவிடுகிறார். கிராமத்து கொம்பன், மெட்ராஸின் காளி, கடைக்குட்டி சிங்கத்தின் குணசிங்கம் என்று படத்திற்கு படம் கதாபாத்திரங்களிலும், நடிப்பிலும் வேறுபாட்டை காட்டும் கார்த்தி, இந்த படத்தில் பணக்கார வீட்டு பையனாக, பிடித்ததை செய்யும் இளைஞராக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பவர், காதலிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங், எடுப்பான தோற்றம், மிடுக்கான நடை என்று இளம் பெண் தொழிலதிபருக்கான அத்தனை குவாலிட்டுகளையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கார்த்தியின் நண்பராக நடித்திருக்கும் விக்னேஷ், காமெடி நடிகராக அல்லாமல் படத்தில் ஒரு வேடமாக வந்து போகிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் என படத்தில் வரும் மற்ற நடிகர்கள் ஊறுகாய் அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் இவர்கள் இரண்டு பேரை சுற்றியே படம் நகர்வதோடு, முழு திரைக்கதையும் இவர்கள் இருவரை மட்டுமே சார்ந்ததாக இருப்பதால், மற்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் பதிய மறுக்கிறார்கள். இருந்தாலும், கார்த்தியும், ரகுல் ப்ரீத் சிங்கும் முழு படத்தையும் தூக்கி சுமந்திருக்கிறார்கள்.

இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி நகரும் கதையை எப்படி சொன்னால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை இயக்குநர் ரஜத் ரவிசங்கர் மிகச்சரியாக யூகித்து திரைக்கதையை அமைத்திருந்தாலும், படத்தின் முக்கிய அம்சமான காதலில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படம் ரசிகர்கள் மனதில் பெவிக்கால் போட்டு ஒட்டியது போல இருந்திருக்கும். ஆனால், அப்படி இல்லாமல், படம் பார்ப்பவர்களின் மனதுக்கு மிக தொலைவிலேயே இப்படத்தின் காதல் காட்சிகள் இருக்கின்றன.

இதற்கு காரணம், கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரது பின்னணியாகவும் இருக்கலாம். இருவரும் பணக்காரர்கள், நினைத்ததை செய்யும் அளவுக்கு அவர்களது பின்புலம் இருக்கிறது. அதனால் தான் என்னவோ அவர்கள் செய்யும் சாகசத்திலும், காதலிலும் நமக்கு ஈர்ப்பு இல்லாமல் போகிறது.

வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கார்த்தி இமயமலையில் ஏறும் காட்சிகளில் கிராபிக்ஸ் தாண்டவமாடினாலும், அவை படத்திற்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. அதேபோல், ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் படத்தின் பலத்தை அதிகரித்திருக்கிறது.

இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கதை மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்ததைவிட, இரண்டு கதாபாத்திரங்களுக்கும், அவர்களது செயல்களுக்கும் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதற்கு ஏற்றவாறு கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் தங்களது வேலையை சரியாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், அவர்களிடம் இருக்கும் காதல் என்ற உணர்வு படம் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படாமல் போவது படத்திற்கு பலவீனமாக உள்ளது.

பக்கத்து வீட்டு பையன் என்று சொல்லும் அளவுக்கு இயல்பான தோற்றம் கொண்ட கார்த்தியை, சம்மந்தம் இல்லாத ஒரு இடத்தில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது போல, காட்சிகளையும், களத்தையும் கையாண்டிருக்கும் இயக்குநர், காதல் என்ற பீலிங்கையாவது சரியாக கையாண்டிருந்தால் ‘தேவ்’ காதலுக்கான அடையாளமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், ‘தேவ்’ கார்த்திகாக மட்டுமே

-ஜெ.சுகுமார்