X

திருவண்ணாமலை மகா தீபத்தன்று பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு, அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவும், உயிர் சேதமும் ஏற்பட்டது. இதனால் மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது ‘டிட்வா’ புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுனர் குழு அறிக்கையில் மலையேறும் பாதை தற்போது உறுதித் தன்மை அற்றும், ஏற்கனவே நிலைச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலை ஏறுவது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலையேற முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.