உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிசை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84.
’16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, ஸ்டுடியோக்குள் முடங்கியிருந்த திரைப்பட படப்பிடிப்புகளை வெளியுலகத்திற்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி சினிமாவில் யார் வேண்டும் என்றாலும் வரலாம், வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை வித்திட்டவர்களில் பாரதிராஜாவுக்கு தான் முதலிடம்.
நடிகராக வேண்டும் என்ற ஆசையால் சினிமாவுக்கு வந்த பாராதிராஜா அதற்கான வாய்ப்பு கிடைக்காத போது இயக்குநராகி விட்டார். அவருக்கு கிடைக்காத வாய்ப்பை பலருக்கு வழங்கிய அவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
இயக்குநராக பல வெற்றிகளை குவித்த பாரதிராஜா, நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்தார். ‘குரங்கு பொம்மை’ படத்தில் அவரது நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே வியந்ததோடு, ஊடகங்களும் வெகுவாக பாராட்டின. தொடர்ந்து ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, அவரது ஒரே மகனான, நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா, உயிரிழந்தது பாராதிராஜவை மிகவும் பாதித்தது. மகனின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய அவருக்கு வீட்டிலும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் வைத்தே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.