X

பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ இரயில் சேவையில் குளறுபடி! – பயணிகள் அதிருப்தி

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலான வழித்தடம் திறக்கப்பட்டிருந்தாலும், அதன் இயக்கும் நேரமும் இரயில் இயக்க இடைவெளியும் (Frequency) பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

Phase I வழித்தடங்களைப் போலன்றி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படாமல், இந்த இரண்டாம் கட்ட வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரயில்கள் இயக்கப்படுவதோடு, நெரிசல் மற்றும் நெரிசலற்ற நேரங்களில் முறையே 10 மற்றும் 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படுவது தங்களுக்குப் பொருந்தவில்லை என்று பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் 6 முதல் 7 நிமிடங்களாக அறிவிக்கப்பட்ட இயக்க இடைவெளி பின்னர் 10 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டிருப்பது போதாது என்று ஐயப்பன்தாங்கல் பகுதி பயணிகள் . குறிப்பிட்டுள்ளனர். மேலும், இரவு 10 மணிக்கு மேல் ஊரை விட்டுச் சென்று அதிகாலையில் திரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் அசௌகரியமாக உள்ளதாகவும், நீண்ட காலம் காத்திருந்தும் பயணிகள் முழுப் பலனைப் பெற முடியாதது நியாயமற்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

போரூர் மற்றும் வடபழனிக்கு இடையே உள்ள ஆறு நிலையங்களின் இரவு நேரக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இயக்க நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள போதிலும், காலதாமதமாகத் திறக்கப்பட்ட இந்தச் சேவையை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, பொதுமக்களின் வசதிக்கேற்ப இரயில்களின் இயக்க நேரத்தையும் அதிர்வெண்ணையும் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.