டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான ‘கண் ஆராய்ச்சி மைய அறக்கட்டளை’ உடன் இணைந்து, கண் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ‘கல்பவிருக்ஷா 2026’ பயிலரங்கை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்களின் மருத்துவத் திறன் மற்றும் தேர்வுக்கான தயாரிப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு தீவிரப் பயிற்சி வகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் தொடர் மருத்துவக் கல்வி (CME) நிகழ்ச்சியில், 30-க்கும் மேற்பட்ட முன்னணிப் பேராசிரியர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
கர்நாடக மாநில அரசின் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் டாக்டர் B. L. சுஜாதா ரத்தோட் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், டாக்டர் அகர்வால்ஸ் ரிஃப்ராக்டிவ் மற்றும் கார்னியா அறக்கட்டளையின் (DARCF) இயக்குநரும் தலைவருமான டாக்டர் சூசன் ஜேக்கப் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையைச் சேர்ந்த இந்நிகழ்வின் அமைப்பு செயலாளர்கள் டாக்டர் எஸ். சௌந்தரி, டாக்டர் திவ்யா அசோக் குமார், டாக்டர் ப்ரீத்தி நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிலரங்கில், வெட் லேப் செய்முறைப் பயிற்சிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளுடன், கண் சிகிச்சையியலில் தேர்வுகளுடன் தொடர்புடைய முக்கியப் பிரிவுகளான கருவிழிப்படல அழற்சி, குளுக்கோமா (கண் அழுத்த நோய்), ஒளிஊடுருவு விழிப்படலம் மற்றும் ஒளிக்கதிர்விலக்கம், கண்புரை, மாறுகண் மற்றும் நரம்பியல் சார்ந்த கண் மருத்துவம், ஆர்பிட் மற்றும் விழியில் ஒட்டறுவை சிகிச்சை ஆகியவை உட்பட, பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் சிறப்பு உரைகள் இடம்பெறுகின்றன. முதுநிலை மருத்துவ மாணவர்களால் முன்வைக்கப்படும் மிகச் சிறந்த மருத்துவ நேர்வு விளக்க சமர்ப்பிப்பிற்கு, ‘சிறந்த மருத்துவ நேர்வுக்கான டாக்டர் (திருமதி) T. அகர்வால் விருது’ வழங்கப்படும்.
சிறந்த நேர்வு விளக்க சமர்ப்பிப்பிற்கு, டாக்டர் எம். திவ்யா டாக்டர் வி. வேலாயுதம் தொடர் சிறப்புப் பங்களிப்பு விருதும், டாக்டர் ஆர். திவ்யா டாக்டர் ஜே. அகர்வால் சிறப்பு விருதும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் B. L. சுஜாதா ரத்தோட், “அடிப்படை மருத்துவ அறிவை ஆழப்படுத்துவதிலும், மருத்துவக் காரணங்களை ஆராயும் திறனை வலுப்படுத்துவதிலும், தேர்வுகளைத் தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்துவதிலும் கல்பவிருக்ஷா பயிற்சி அமர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய சிறப்பான கல்வி முயற்சிகள், மாணவர்களின் வழக்கமான முதுநிலைப் பட்டப்படிப்பு பயிற்சிக்குத் துணைபுரியும். அதற்கும் கூடுதலாக, நம் நாட்டின் வருங்கால கண் மருத்துவர்கள் தங்களது அறிவை கண் நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சைப் பராமரிப்பாக சேவையாற்றவும் பெரிதும் உதவும். நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட இத்தகைய கற்றல் முயற்சிகள், முதுநிலை மருத்துவக் கல்வியில் மேன்மை நிலையை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்ற நகர்வாக கருதப்படுகின்றன,” என்று கூறினார்.
இந்த இரண்டு நாள் நிகழ்வு குறித்துப் பேசிய டாக்டர் சூசன் ஜேக்கப், “கண் மருத்துவத் துறையில் தேசிய அளவிலான ஒரு முன்னணி முதுநிலைத் தொடர் மருத்துவக் கல்வி (CME) நிகழ்வாக ‘கல்பவிருக்ஷா’ அங்கீகாரம் பெற்றுள்ளது. மாணவர்களின் கல்வி அறிவை வலுப்படுத்தவும், மருத்துவப் புரிதலை மேம்படுத்தவும், அவர்களின் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு அதிக தன்னம்பிக்கையுடன் தயாராகவும் இது பயிற்சிக்கான செயல்தளத்தை வழங்கி வருகிறது. அதிகப் பலன் தரக்கூடிய இதன் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை, வழக்கமான முதுநிலைப் பயிற்சிக்கு ஒரு மதிப்புமிக்க துணையாக இருப்பதோடு, திறமையான மற்றும் தன்னம்பிக்கை மிக்க கண் மருத்துவர்களை உருவாக்குவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகிறது,” என்றார்.