X

நீண்டகால நீரிழிவு சாதனையாளர்கள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் டைப் 1 நீரிழிவு மாணவர்களுக்கு விருது வழங்கிய டாக்டர் மோகன்ஸ் மையம், MDRF மற்றும் ஹிந்துஜா அறக்கட்டளை

சென்னை, நவம்பர் 5, 2026: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக டைப் 2 சர்க்கரை நோயுடன் வாழ்ந்து, தொடர்ந்து நோயைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டு வருபவர்களையும், டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களையும் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் (Dr. Mohan’s Diabetes Specialities Centre), மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) மற்றும் ஹிந்துஜா அறக்கட்டளை இணைந்து இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை நவம்பர் 5ம் தேதி நடத்தின.

இதில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக டைப் 2 சர்க்கரை நோயுடன் வாழ்ந்து, முறையான சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பின் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு ‘டாக்டர் வி. மோகன் சர்க்கரை நோய் பொன்விழா விருது’ வழங்கப்பட்டது. அதேபோல், டைப் 1 சர்க்கரை நோயுடன் வாழ்ந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ‘ஹிந்துஜா அறக்கட்டளை டைப் 1 சர்க்கரை நோய் கல்விச் சிறப்பு விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுகளை டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி. மோகன், ஹிந்துஜா அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் டாக்டர் ஆஷிஷ் மெந்தி, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் ஆர். எம். அஞ்சனா, மையத்தின் துணைத் தலைவர் டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டாக்டர் ஆஷிஷ் மெந்தி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் வி. மோகன் பேசுகையில், “50 ஆண்டுகளுக்கும் மேலாக டைப் 2 சர்க்கரை நோயுடன் வாழ்ந்து, தொடர்ந்து அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது அவர்களின் தொடர் முயற்சி, கட்டுப்பாடு மற்றும் உடல்நலத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது. முறையான சிகிச்சை, வழக்கமான மருத்துவப் பரிசோதனை மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு இருந்தால் சர்க்கரை நோயுடன் நீண்ட காலம் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு இவர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவர்களை கவுரவிப்பதன் மூலம் சர்க்கரை நோயுடன் வாழ்பவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்க விரும்புகிறோம்” என்றார்.

டாக்டர் ஆஷிஷ் மெந்தி பேசுகையில், “டைப் 1 சர்க்கரை நோயுடன் வாழும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் தங்களது கல்வியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த இலக்குகளை அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெற வேண்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்திக் கொண்டே கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை அங்கீகரிப்பது, அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும். அவர்களின் திறமையைப் பாராட்டுவதுடன், உரிய மருத்துவப் பராமரிப்பு, குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இந்த முயற்சி எடுத்துரைக்கிறது” என்றார்.

டைப் 2 சர்க்கரை நோயுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களின் மன உறுதியையும், டைப் 1 சர்க்கரை நோயுடன் போராடியபடியே கல்வியில் சாதிக்கும் மாணவர்களின் திறமையையும் அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.