X

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்தது

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து தினசரி 30 லாரிகளாக குறைந்துபோனது.

இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.

கடந்த வாரம் வரை மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.40-வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.15 ஆக குறைந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடந்த 3 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.