அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (பிப். 2) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Center of Seismology -– NCS) தெரிவித்துள்ளது.
NCS வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அகலம் (Latitude) 9.03 டிகிரி வடக்காகவும், தீர்க்கரேகை (Longitude) 92.78 டிகிரி கிழக்காகவும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளமான X தளத்தில் NCS வெளியிட்டுள்ள பதிவில், “02.02.2026 அன்று காலை 03:31:12 மணிக்கு, நிக்கோபார் தீவுகள் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கிலோமீட்டர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீவுகள், இந்தியாவின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின் படி ‘சீஸ்மிக் மண்டலம் – V’ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே மிக அதிக நிலநடுக்கச் செயல்பாடுகள் காணப்படும் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.