கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான திருவிழாவான ஈஸ்டர் பெருநாள் (உயிர்த்தெழுதல் திருநாள்) இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் மீட்பராகக் கருதப்படும் இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வையே இந்நாள் பறைசாற்றுகிறது.
பைபிள் முன்னறிவித்தபடி, கன்னி மரியாளால் மகனாகப் பிறந்து, ரோம் பேரரசர் திபேரியுவின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த இயேசு, தனது சீடர் யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவை மரணத்தைத் தழுவினார். ஆனால், ‘மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்’ என்ற அவரது வாக்கின்படி, கல்லறையைக் காவல் காத்த ரோம் போர்ச் சேவகர்கள் முன்னிலையிலேயே வானதூதரின் வருகையுடன் அவர் உயிர்த்தெழுந்தார். “அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்” என்ற அந்தச் செய்தி, உலக வரலாற்றையே கி.மு., கி.பி. என இரண்டாகப் பிரிக்கும் அளவுக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
உயிர்த்தெழுந்த பின் 40 நாட்கள் சீடர்களுக்குக் காட்சியளித்த இயேசு, “காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு வழங்கினார். மரணத்தை வென்ற இந்த நாள், தீமையை நன்மை வெல்லும் என்பதையும், நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.