X

எடப்பாடி பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு நாளை ( ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,” சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிய தமிழ் மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டபோது மனமுடைந்தார்கள். சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற பலகோடி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில், இதய தெய்வம் அம்மா அவர்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அறிவித்து, மக்களின் மனங்களைக் குளிர்வித்தார்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ்நாட்டைப் படைத்திடுவோம் என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும். மலர இருக்கும் ‘பராபவ’ ஆண்டில், மக்களின் வாழ்வில் நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம் நிறையட்டும்; எண்ணங்கள் ஈடேறட்டும்; வெற்றிகள் பதியட்டும்; மன நிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக அமையட்டும் என மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது மனமார்ந்ததமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.