X

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள அரசு 2019 ஆம் ஆண்டு மசாலாப் பத்திரங்களை வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் இதுபோன்ற பத்திரங்களை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா ஆனது.

கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது. இந்த நிதியை சட்டவிரோதமாக திசை திருப்பியதாகவும், அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் ரூ.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பானதாகக் கூறப்படுகிறது. அதே வழக்கில், பினராயி விஜயன், அவரது தனிச் செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கும் பெமா சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்ட சம்மன் பாஜகவின் அரசியல் விளையாட்டு என ஆளும் இடதுசாரி கூட்டணி விமர்சித்துள்ளது.