ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் கடந்த 28-ம் தேதி முதல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அத்துடன் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தற்காலிகமாக மூடியது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதை முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்று எரிபொருளை நிரப்பிச் செல்லும் நிலை காணப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான சமையல் எரிவாயு சரக்குகள் இந்தியா வந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையிலும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் உள்நாட்டு விலைகளை நிலையாகப் பராமரிக்க அரசின் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 13 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்கப்படும் என்றும், உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், எரிபொருள் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (மார்ச் 27) ஆலோசனை நடத்த உள்ளார்.