X

அரிய வகை கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை – குமரன் மருத்துவமனையில் 20 மணிநேர மாரத்தான் அறுவைசிகிச்சை

29 வயதான ஒரு ஐ.டி. பணியாளருக்கு, குடலைத் தாங்கிப் பிடிக்கும் சவ்வுப் பகுதியில் இருந்த 20 x 20 x 18 செ.மீ அளவுள்ள, மிகவும் அரிய மற்றும் அபாயகரமான கட்டியை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குமரன் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு 20 மணி நேரம் தொடர்ந்து மேற்கொண்ட அறுவைசிகிச்சையில் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு 10 நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இந்நோயாளி, விரைவில் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நோயாளிக்கு மரபணு ரீதியாகவே சில கட்டிகள் உருவாகும் அபாயம் அதிகம் கொண்ட ‘நியூரோஃபைப்ரோமாடோசிஸ் வகை 1’ (NF1 – Neurofibromatosis Type 1) என்ற மரபியல் ரீதியான பரம்பரை நோய்க்கான வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ரேலாவின் மருத்துவக் குழுவினர் மற்றும் குடல்-இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பி. கபில் நாகராஜ் ஆகியோர் இந்த மருத்துவ சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்களுக்குத் துணையாக மயக்கவியல் நிபுணர், ரத்த நாள அறுவைசிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர், தொற்றுநோய் தடுப்பு நிபுணர், கதிரியக்கவியல் நிபுணர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு செவிலியர்கள் அடங்கிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவக் குழு, இந்த சிக்கலான மாரத்தான் அறுவைசிகிச்சைக்கு முன்பும் மற்றும் அதற்குப் பின்பும் சிறப்பான ஆதரவையும், பங்களிப்பையும் வழங்கினர். அதிநவீன அறுவைசிகிச்சைத் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களின் உதவியுடன் நடைபெற்ற இந்த மருத்துவ செயல்முறையில் ரத்த நாளங்களுக்குப் பாதிப்பின்றி கட்டி மிகத் துல்லியமாக அகற்றப்பட்டது.

இது குறித்து டாக்டர் கபில் நாகராஜ் கூறுகையில், “நோயாளி கடுமையான களைப்பு, சரியாக சாப்பிட இயலாமை மற்றும் உடல் எடை குறைவு ஆகிய பிரச்சனைகளுடன் எங்களை அணுகினார். சி.டி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளில், 20 × 20 × 18 செ.மீ அளவிலான பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கட்டியின் அளவை விட, அது குடல் பகுதியில் அமைந்திருந்த இடமே பெரும் சிக்கலானதாகவும், அதிக சவாலானதாகவும் இருந்தது. வயிற்றுப் பகுதி உறுப்புகளுக்கு ரத்தம் செல்லும் முக்கிய ரத்த நாளங்கள் அமைந்துள்ள மையப் பகுதியில் இந்தக் கட்டி இருந்தது. ரத்த நாளங்களுக்கு மிக அருகில் கட்டி இருந்ததால், சிறிதளவுகூட தவறோ, இரத்தநாளங்களுக்கு சேதமோ நிகழாதவாறு 20 மணி நேரமும் மிகுந்த கவனத்துடன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது,” என்றார்.

கீழ்ப்பாக்கம் குமரன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.பி. சிவகுமார் கூறுகையில், “அதிக அனுபவம் வாய்ந்த பல்வேறு துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியும், சிறப்பான திட்டமிடலுமே மிகவும் சவாலான இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக மாற்றியிருக்கிறது. குமரன் மருத்துவமனையில், நோயாளிகள் பாதுகாப்பாகத் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில், இதுபோன்ற சிக்கலான சிகிச்சைகளை மேற்கொள்ளத் தேவையான நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். ரோபோடிக் அறுவைசிகிச்சை உள்ளிட்ட நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதன் மூலம், துல்லியமான, பாதுகாப்பான சிகிச்சையின் மூலம் நோயாளிகள் குணம் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “காரணமின்றி உடல் எடை குறைவது என்பது ஏதேனும் ஒரு நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம் என்பதால், அதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. சில குறிப்பிட்ட கட்டிகள் உருவாகுவதில் மரபணுக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற கட்டிகள் உருவாவதை எல்லா நேரங்களிலும் தடுக்க முடியாது என்றாலும், முழு உடல் பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும் என்பதற்கு இந்த நோயாளிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையே சிறந்த எடுத்துக்காட்டாகும்,” என்றார்.