X

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக விழுங்குவதில் சிரமம் இருந்த 8 வயது சிறுவனுக்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சை! – ரேலா மருத்துவமனை சாதனை

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, ரேலா மருத்துவமனையானது ‘டைப் 2 அகலேசியா கார்டியா’ எனப்படும் அதி தீவிரமான மற்றும் அரிய வகை உணவுக் குழாய் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனுக்கு ‘போயம்’ (POEM) என்ற மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இந்தக் கோளாறு உணவுக்குழாயின் தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளைப் பாதிப்பதால், உணவு மற்றும் திரவங்களை விழுங்கி இரைப்பைக்குள் அனுப்புவது அந்நோயாளிகளுக்கு அதிக சிரமமானது.

திட உணவு மற்றும் திரவங்களை விழுங்குவதில் நாளுக்கு நாள் அதிக சிரமத்தை அனுபவித்த இச்சிறுவன், சிகிச்சை முடிவடைந்த பிறகு திருப்திகரமாக பாதிப்பிலிருந்து மீண்டான். மேலும், சிகிச்சை செயல்முறைக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் அவனால் திரவத்தை அருந்தவும் மற்றும் அதனைத் தொடர்ந்து மென்மையான உணவை உண்ணவும் முடிந்தது.

பொதுவாக, நாம் உணவை விழுங்கும்போது உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள சுருக்கத் தசையானது தளர்ந்து, உணவு மற்றும் திரவங்கள் இரைப்பைக்குள் செல்ல வழிவகுக்கும். ஆனால், ‘அகலேசியா கார்டியா’ பாதிப்பில், இந்த தசைகள் போதுமான அளவு தளராமல், அசாதாரணமாக இறுக்கமாகி, உணவு இரைப்பைக்குள் செல்வதைத் தடுத்து நிறுத்துகிறது. இதனால் உணவை விழுங்குவதில் படிப்படியாக சிரமம் அதிகரித்துக்கொண்டே செல்லும். குழந்தையின் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனும் இதனால் பாதிக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளில் 0.1 முதல் 0.18 பேரை மட்டுமே பாதிப்பதால், அகலேசியா கோளாறு மிகவும் அரிதானது.

பாரம்பரிய முறையில் அகலேசியாவுக்கு லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணப்படுகிறது. இதில் மருத்துவர் வயிற்றில் சிறிய துளைகள் இட்டு, உணவுக்குழாயின் இறுக்கமான தசையைத் தளர்த்துவார். ஆனால், இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளி குணமடைய அதிக நாட்கள் (3-4 நாட்கள்) தேவைப்படும் என்பதோடு, தையல்கள் போடப்படுவதால் தழும்புகளும் ஏற்படும். இதற்கு மாற்றாக, ‘போயம்’ (POEM) என்பது ஒரு மேம்பட்ட எண்டோஸ்கோபி முறையாகும். இதில் வாயின் வழியாக எண்டோஸ்கோப் செலுத்தப்பட்டு, உணவுக்குழாயின் உட்சுவரில் ஒரு சிறிய சுரங்கம் போன்ற பாதை உருவாக்கப்பட்டு, இறுக்கமான தசை நார்கள் மிக கவனமாகப் பிரிக்கப்படுகின்றன. இது அடைப்பைச் சரிசெய்து, திட மற்றும் திரவ உணவுகள் எளிதாக இரைப்பைக்குள் செல்ல உதவுகிறது. இந்த முழுமையான சிகிச்சையும் வாயின் வழியாகவே செய்யப்படுவதால், வெளிப்புறக் காயங்களோ, தையல்களோ அல்லது தழும்புகளோ ஏற்படுவதில்லை.

இச்சிகிச்சையானது மருத்துவ இரைப்பை குடலியல் துறை மருத்துவரும் மற்றும் எண்டோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் SNK. செந்தூரன் அவர்களால், மயக்கவியல் நிபுணர்கள், குழந்தைகள் நல மருத்துவக் குழு மற்றும் செவிலியர்கள் குழுவின் சிறப்பான ஆதரவோடு வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.

இந்தச் சாதனை குறித்து டாக்டர் SNK. செந்தூரன் கூறுகையில், “பெரியவர்களை விடக் குழந்தைகளின் உணவுக்குழாய் மிகவும் சிறியதாகவும், குறுகியதாகவும் இருக்கும் என்பதால், ஒரு 8 வயது குழந்தைக்குப் போயம் (POEM) சிகிச்சையைச் செய்வதற்கு சிறப்பான தொழில்நுட்பத் திறனும், துல்லியமும் தேவைப்படுகிறது. குழந்தைகளின் திசுக்கள் மென்மையானவை என்பதால், உணவுக்குழாய் சுவரில் சுரங்கப் பாதையை உருவாக்குவது மிகவும் சவாலானது. இவ்வளவு சவால்கள் இருந்தபோதிலும், நாங்கள் இந்த சிகிச்சையைச் சுமார் 50 நிமிடங்களில் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். இந்த அரிய நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குத் தழும்பில்லாத, நவீன சிகிச்சை முறையின் வழியாக குணப்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய முன்னேற்றமாகும்” என்றார்.

ரேலா மருத்துவமனையின் கல்லீரலியல் மற்றும் இரையககுடலியல் மருத்துவ துறை இயக்குநர் டாக்டர் தினேஷ் ஜோதிமணி கூறுகையில், “விழுங்குவதை சிரமமாக்கும் (அகலேஷியா) பாதிப்புள்ள இச்சிறுவன், ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, குழாய்கள் மூலம் உணவளிக்கப்பட்டு, பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய ஒரு கடினமான சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். ஆனால், இதுபோன்ற புதுமையான எண்டோஸ்கோபிக் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் மருத்துவ நிபுணத்துவமும், இச்சிறுவன் தனது விழுங்கும் திறனை முழுமையாகத் திரும்பப் பெற்று, சிகிச்சைக்குப் பிறகு அடுத்த 24 மணி நேரத்திற்குள் நலமுடன் வீடு திரும்ப உதவியுள்ளன. விழுங்குவதை சிரமமாக்கும் பாதிப்பைப் பொறுத்தவரை, அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியமாகும். உணவு அல்லது தண்ணீரைக் கூட விழுங்குவதில் சிரமம், செரிக்காத உணவு மீண்டும் வாய்க்கே வருதல், திரும்ப திரும்ப வாந்தியெடுத்தல், காரணமின்றி உடல் எடை குறைதல் அல்லது சாப்பிடும் போது இருமல் வருவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்படுகிறதா என்பதைப் பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகளை குழந்தைகளிடம் சாதாரணமாக ஏற்படும் உணவுப்பழக்கச் சிக்கல்கள் என நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது. இத்தகைய குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம், ஊட்டச்சத்து குறைபாடு, போதுமான உடல் எடை இன்மை மற்றும் உணவு நுரையீரலுக்குள் செல்வது போன்ற ஆபத்தான விளைவுகளைத் தடுக்கலாம்,” என்று தெரிவித்தார்.

இந்த மைல்கல் சாதனை குறித்து, ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா பேசுகையில், “பெரியவர்களுக்கு ஏற்படும் அகலேசியாவுக்குப் போயம் சிகிச்சை என்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதை குழந்தைகளுக்குச் செய்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பத் துல்லியமும், சிறப்பு நிபுணத்துவமும் தேவை. மிகக் குறைவான எண்டோஸ்கோப்பி மையங்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களால் மட்டுமே குழந்தைகளுக்கான போயம் சிகிச்சையைச் செய்ய இயலும். இச்சிகிச்சையைத் தமிழ்நாட்டில் முதல்முறையாக வெற்றிகரமாகச் செய்திருப்பது, நமது மாநிலத்தின் அதிநவீன எண்டோஸ்கோபி மருத்துவ செயல்திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். தழும்பில்லாத சிகிச்சைகள் மூலம் குழந்தைகள் விரைவாகக் குணமடைய சிறப்பான, நவீன சிகிச்சை முறைகளை வெற்றிகரமாக பயனப்டுத்துவதில் எங்களின் நிபுணத்துவத்தையும், அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.