X

மேம்பட்ட சிறுநீரக அறுவைசிகிச்சைகளுக்காக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ‘லுமெனிஸ்’ லேசர் தொழில்நுட்பம் அறிமுகம்

சிறுநீரகவியல் சிகிச்சைகளில் ஒரு புதிய மைல்கல்லாக, ‘மோசஸ் 2.0’ (MOSES 2.0) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ‘லுமெனிஸ் பல்ஸ் 120H’ ஹோல்மியம் லேசர் கருவியைத் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. தீங்கற்ற புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (BPH), சிறுநீர் பாதையில் கற்கள், சிறுநீர் குழாய் சுருக்கங்கள், சிறுநீர் பாதையில் கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சிறுநீரகவியல் பாதிப்புகளுக்கு, உடலில் பெரிய அளவிலான அறுவை சிகிச்சையின்றி துல்லியமான சிகிச்சை வழங்குவதை இந்நவீன தொழில்நுட்பம் ஏதுவாக்குகிறது.

இந்த நவீன கருவியின் மூலம் அதிகப்படியான புரோஸ்டேட் (ஆண்மைச்சுரப்பி) திசுக்களைத் துல்லியமாக அகற்றவும், சிறுநீரகக் கற்களை சிறு துகள்களாக திறம்பட உடைக்கவும் முடியும். தகுதியான நோயாளிகளுக்கு இந்த முறையின் மூலம் சிகிச்சை அளிக்கும்போது, இரத்த இழப்பும், அறுவைசிகிச்சையின் காயப் பாதிப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கும்; மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவதுடன் நோயாளி விரைவாகக் குணமடைவார்.

இக்கருவியின் அறிமுகத்தோடு இணைந்து, புரோஸ்டேட் சுரப்பி பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக, ‘புரோஸ்டேட் ஆரோக்கிய விழிப்புணர்வுப் பிரச்சார’ திட்டத்தையும் இம்மருத்துவமனை அறிவித்துள்ளது. சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பாதிப்பு அறிகுறிகளை 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெரும்பாலும் கவனிக்காமல் அலட்சியம் செய்கின்றனர். எனவே, இத்தகைய நபர்கள் உரிய மருத்துவ பரிசோதனையின் மூலம் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை ஊக்குவிக்க, சலுகை விலையிலான சிறப்பு ‘புரோஸ்டேட் பரிசோதனைத் தொகுப்பு’ இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன லேசர் கருவியை பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு. மிஷ்கின் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்தொடக்கவிழா நிகழ்வில் எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) திரு. சிவா , சிறுநீர்ப்பாதையியல் துறையின் மருத்துவ பிரிவின் தலைவரும் மூத்த நிபுணருமான பேராசிரியர் டாக்டர் மணிகண்டன் , சிறுநீர்ப்பாதையியல் நிபுணர் டாக்டர் சுரேஷ் மற்றும் மருத்துவச் சேவைகளுக்கான உதவி இயக்குநர் டாக்டர் ஸ்ரீலேகா வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஹோல்மியம் (‘Holmium:YAG’) லேசர் என்பது உடல் திசுக்களில் உள்ள நீர்ச்சத்தால் எளிதில் உறிஞ்சப்படும் ஆற்றலை உருவாக்கும் ஒரு பிரத்யேக மருத்துவ லேசர் சாதனமாகும். சிறுநீரகக் கற்களை உடைப்பதற்கும், அதிகப்படியான புரோஸ்டேட் திசுக்களை அகற்றுவதற்கும் இது மிகவும் உகந்ததாக அமைகிறது. குறிப்பாக முதியவர்கள், குறிப்பிட்ட இதய நோய் பாதிப்புள்ளவர்கள் மற்றும் இரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு, அறுவை சிகிச்சையின்போது இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதால், அத்தகைய நோயாளிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாகும்.

இது குறித்து எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையின் சிறுநீர்ப்பாதையியல் துறையின் மருத்துவ பிரிவின் தலைவரும் மூத்த நிபுணருமான பேராசிரியர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது: “லுமெனிஸ் பல்ஸ் 120H என்பது அதிக சக்தி வாய்ந்த ஹோல்மியம் லேசர் கருவியாகும். இது எண்டோஸ்கோப் கருவியின் வழியாகச் சிறுநீர் பாதைக்குள் செலுத்தப்படும் மிக மெல்லிய இழை மூலம் லேசர் ஆற்றலை வழங்குகிறது. இதன் மூலம் புரோஸ்டேட் வீக்கத்திற்கான ‘ஹோலெப்’ (HoLEP) சிகிச்சை மற்றும் சிறுநீரகக் கற்களுக்கான ‘லேசர் லித்தோட்ரிப்சி’ போன்ற மேம்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், அதிகப்படியான புரோஸ்டேட் திசுக்களைத் துல்லியமாக அகற்றவும், கற்களைத் திறம்பட உடைக்கவும் இக்கருவி உதவுகிறது,” என்றார்.

புரோஸ்டேட் வீக்கத்திற்கான சிகிச்சை குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த நவீன லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் சிறுநீர் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் புரோஸ்டேட் திசுக்களை அகற்றி, சீரான சிறுநீர் வெளியேற்றத்திற்கு உதவுகிற ‘ஹோலெப்’ (HoLEP) மற்றும் ‘லேசர் வேப்பரைசேஷன்’ ஆகிய சிகிச்சைகளை வழங்குகிறோம். குறிப்பாக, மிக அதிக அளவில் வீக்கமடைந்த புரோஸ்டேட் சுரப்பிகளுக்குச் சிகிச்சையளிக்க இம்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தகுதியான நோயாளிகளுக்கு குறைந்த இரத்தப்போக்கு, சிறுநீர் வடிகுழாய் நேரம் மற்றும் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவதுடன், சில நோயாளிகள் சிகிச்சை முடிந்த அன்றோ அல்லது மறுநாளோ வீடு திரும்பவும் வாய்ப்புள்ளது,” என்றார்.

இக்கருவியின் முக்கியச் சிறப்பம்சமான ‘மோசஸ் 2.0’ தொழில்நுட்பம், இலக்கு வைக்கப்பட்ட திசு அல்லது கல்லின் மீது லேசர் ஆற்றல் துல்லியமாகச் செலுத்தப்படுவதை மேம்படுத்துகிறது. வழக்கமான லேசர் கருவிகளைப் போலன்றி, மோசஸ் தொழில்நுட்பமானது திரவத்தின் ஊடாக ஆற்றலைத் தடையின்றிக் கடத்தும் பிரத்யேக லேசர் துடிப்புகளைப் பயன்படுத்துவதால், இலக்கின் மீது ஆற்றல் முழுமையாகச் சென்றடைந்து அறுவைசிகிச்சையின் திறனையும், செயல்முறையின்போது சிறப்பான கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது.

எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி திரு. சிவா அவர்கள் பேசுகையில்: “மோசஸ் 2.0 தொழில்நுட்பத்துடன் கூடிய லுமெனிஸ் பல்ஸ் 120H கருவியின் அறிமுகம், அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தையும், நோயாளிகளை மையப்படுத்திய உயர்தரச் சிகிச்சையையும் வழங்குவதில் எங்களது அர்ப்பணிப்பையும், திறனையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. மருத்துவத் திறன்களை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான சிகிச்சைப் பலன்களை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட, குறைந்தபட்ச ஊடுருவல் (minimally invasive) சிகிச்சை முறைகள் எளிதில் கிடைப்பதை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் எங்களின் தொடர்ச்சியான கவனத்தை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. இதனுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள புரோஸ்டேட் ஆரோக்கிய விழிப்புணர்வுப் பிரச்சாரம், புரோஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள் குறித்து ஆண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உரிய நேரத்தில் பரிசோதனை மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளைப் பெற ஊக்குவிக்கும்,” என்று குறிப்பிட்டார்.