பார்முலா ஒன் கார் பந்தயம் – 16 வது சுற்றில் ஹாமில்டன் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் இயக்கினர்.

இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 70-வது வெற்றியாக இது அமைந்தது.

தகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2.545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட முந்திதான் சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரே அணி என்பதாலும், ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கியுள்ளதாலும் அவருக்கு வழிவிடும்படி அணி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் அதற்கு கட்டுப்பட்டு ஒதுங்கினார். இல்லாவிட்டால் போட்டாஸ் தான் முதலிடத்தை பிடித்திருப்பார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.

முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரி அணி) 4-வதாக வந்து 12 புள்ளிகளையும் மற்றும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 5-வதாக வந்து 10 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணி வீரர்களான ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) முறையே 9-வது, 10-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியை கடைசி கட்டத்தில் நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

16 சுற்று முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரெய்க்கோனன் 186 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி வருகிற 7-ந்தேதி ஜப்பானில் நடக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news