தமிழ்நாடு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வுகளில் ஒன்றாக நீட் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தின் சொந்த நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து, இந்த மாதம் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களைவிட வசதியான பின்னணியைக் கொண்ட, ஆங்கில வழியில் படிக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு சாதகமாக இருப்பதாக தமிழக அரசு அமைத்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவும் கண்டறிந்துள்ளது. இந்த சட்ட மற்றும் அரசியல் போராட்டம் டெல்லியிலும் நீதிமன்றங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்க, இந்த இடைவெளியை ஒரு சிறிய கிராமத்தில் செயல்படும் இலவச பயிற்சி மைய மாணவர்கள் தகர்த்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நீட் கலந்தாய்வு நிறைவடைந்து கொண்டிருந்தபோது, திருமதி காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தனது காரில் தனியாக அமர்ந்து, கடந்த ஓராண்டு கால உழைப்பின் பலனை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நடத்தி வரும் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற, தமிழகத்தின் சிறிய கிராமங்களைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் இடம் பெற்றிருந்தனர். “ஒரு வருட கால அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, எதிர்மறை எண்ணங்கள், போராட்டங்கள் மற்றும் கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக அந்த ஒரு இரவு இருந்தது. எங்கள் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து, மகுடஞ்சாவடியில் உள்ள வகுப்பறைகளுக்கு, அங்கிருந்து மருத்துவக் கல்லூரிகளின் நடைபாதைகளுக்கு எங்கள் குழந்தைகள் வந்திருக்கும் பயணம் எங்களுக்கு பெருமிதமான தருணம்” என்றார்.
சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந்த பயிற்சி மையத்தை காயத்ரி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். கோயம்புத்தூரைச் சேர்ந்த கங்கா மருத்துவமனை நிறுவனம் சார்பில் 2024ஆம் ஆண்டு இந்த மையம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் காயத்ரியின் மகனும் நீட் தேர்வை எழுதினார். சிலுவம்பாளையம், கவுண்டனேரி, வெள்ளாண்டிவலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த மையத்தில் பயின்று வருகின்றனர். சில மாணவர்கள் வகுப்புகளுக்காக தினமும் இரண்டு மணி நேரம் வரை பயணம் செய்து, பின்னர் பகுதி நேர வேலைகளைச் செய்து, இரவு நேரங்களில் படித்துள்ளனர். அதிக சிரமங்களை எதிர்கொண்ட பெண் மாணவர்களுக்காக பின்னர் விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து காயத்ரி பகிர்ந்து கொண்டதாவது, “இந்த மாணவர்களிடம் முயற்சியோ அல்லது ஆர்வமோ இல்லாதது பிரச்சினையாக இருக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான வாய்ப்பும் வசதியும் இல்லாததுதான் பிரச்சினை. அருகில் நீட் பயிற்சி மையம் இல்லாதது, பயிற்சிக் கட்டணத்தை செலுத்த முடியாதது, தமிழில் போதுமான கல்வி வளங்கள் இல்லாதது, குறிப்பாக மாணவிகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கம் இல்லாதது போன்றவை மிகப்பெரிய தடைகளாக இருந்தன.
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன. வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டதுடன், ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தமிழ் வழியில் படித்த மாணவி ஒருவர், ’கேள்வி புரிந்தால்தானே அதற்கான பதிலை சொல்ல முடியும் மேடம்’ என தனது சிரமத்தை எளிமையாக புரிய வைத்தார். இது அனைவருக்கும் சமமான தேர்வு கிடையாது. அது ஒரு போராட்டமாக இருந்தது. மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் என மூவரும் பகிர்ந்து கொண்ட ஒரே கனவுதான் மாற்றத்தை ஏற்படுத்தியது” என்றார்.
இந்த முயற்சிக்கு சிஎஸ்ஆர் ஆதரவு கொடுத்த கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை நிர்வாகம், ஆலோசகர்கள் சதீஷ் மற்றும் ராஜேஷ், ஆசிரியர்கள் செந்தில், சக்திவேல், திலகம், ஒருங்கிணைப்பாளர் அருண் தங்கராஜ் மற்றும் டைபிஸ்ட் சுகன்யா ஆகியோருக்கும் காயத்ரி நன்றி தெரிவித்தார். “இந்தக் குழந்தைகள் நிச்சயம் இந்த உதவியை மற்றவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று சிறிய அளவில் இது தொடங்கியிருந்தாலும் நாளை மிகப்பெரிய மாற்றமாக இது இருக்கும்” என்று அவர் கூறினார்.