X

நெருங்கி வரும் கஜா புயல் – அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீன் பிடிக்க தடை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும், அப்போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது. ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தி வருகிறது.

கஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டம் பழையாறு, பூம்புகார், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

மீனவர்களுக்கான அறிவுறுத்தல் பற்றி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

கஜா புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால், அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.

புயல் நெருங்கி வருவதால் அனைத்து மீன்பிடி படகுகளையும் பத்திரமாக மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற சென்னை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 160 மீன்பிடி விசைப்படகுகள் பத்திரமாக கரைதிரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன் இறங்கு தளங்களுக்கு திரும்பும் விசைப்படகுகளை பத்திரமாக மீட்க அம்மாநில மீன்வளத்துறை இயக்குனரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.