X

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை – சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை

தங்கம் விலை கட்டுக்கடங்காத காளையை போல துள்ளிக்குதித்து எகிறி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பெரிய அளவில் உயர்வு என்பது எப்போதாவது ஒரு நாள் இருக்கும். ஆனால் சமீப நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் கண்டு, சவரனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. நேற்று இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டது.

இப்படியாக விலை ஏறிச்சென்றால், தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவி வருகிறது. இனிவரும் நாட்களிலும் விலை ஏற்றம் இருந்தாலும், அவ்வப்போது விலை சற்று குறையும் என்றே சொல்லப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று காலையில் கிராமுக்கு ரூ.370-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 960-ம் உயர்ந்து இருந்தது.

பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் அதிகரித்தது. ஆக ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650-ம், சவரனுக்கு ரூ.5 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது.

இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை நேற்று பதிவு செய்துவிட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 330-ம், சவரனுக்கு ரூ.18 ஆயிரத்து 640-ம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும் பார் வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.