2027 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலைத் தமிழக அரசு முறைப்படி அறிவித்துள்ளது. பொதுத் துறை சார்பில் தலைமைச் செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்ட அரசாணையின்படி (G.O.), 1881ஆம் ஆண்டின் செலாவணி முறிச்சட்டத்தின் (Negotiable Instruments Act, 1881) கீழ் இந்த விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்.
வழக்கம் போல் அனைத்துச் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டில் ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 1), பொங்கல் (ஜனவரி 15), தைப்பூசம் (ஜனவரி 22), குடியரசு நாள் (ஜனவரி 26), ரம்ஜான் (மார்ச் 10), புனித வெள்ளி (மார்ச் 26), தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள் (ஏப்ரல் 14), பக்ரீத் (மே 17), மொகரம் (ஜூன் 15), கிருஷ்ண ஜெயந்தி (ஆகஸ்ட் 25), ஆயுத பூஜை (அக்டோபர் 8), தீபாவளி (அக்டோபர் 28) உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்கள் வேலைநாட்களில் வருகின்றன.
மேலும் திருவள்ளுவர் நாள் (ஜனவரி 16), உழவர் திருநாள் (ஜனவரி 17), மே நாள் (மே 1), சுதந்திர நாள் (ஆகஸ்ட் 15), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 4), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), விஜயதசமி (அக்டோபர் 9) மற்றும் கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) ஆகியவை வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.