தமிழ் நாட்டில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், டீசல் மற்றும் உதிரி பாகங்கள் வாங்க நிதியின்றி நிறுவனங்கள் திணறி வருவதாகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.
த.வெ.க ஆட்சியின் வாக்குறுதிப்படி அக்.2 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணத் திட்டம்’ மூலம் 12,695 பேருந்துகளில் தினமும் 84.32 லட்சம் பெண்கள் இலவசமாகப் பயணிப்பதால், நாள்தோறும் இயக்க வருவாய் ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடியாகக் பாதாளத்திற்குச் சரிந்துள்ளதாகவும், இதர மானியங்களைச் சேர்த்தாலும் தினசரி வருவாய் ரூ.47 கோடியிலிருந்து ரூ.22 கோடியாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமும் டீசலுக்கு ரூ.16.17 கோடி, பராமரிப்பிற்கு ரூ.2.35 கோடி என மொத்தம் ரூ.18.52 கோடி தேவைப்படும் சூழலில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்கனவே ரூ.150 கோடி கடன்பட்டுள்ளதால் 2% ரொக்கத் தள்ளுபடியையும் இழந்து ரூ.3 கோடி கூடுதல் நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்த அன்புமணி, போக்குவரத்துக் கழகங்களின் முடக்கத்தைத் தவிர்க்க அரசு உடனடியாக வெற்றிப் பயண நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.