பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
இந்நிலையில் தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,
* ஆளுநர் பேசி கொண்டிருந்தபோது அவரது மைக் தொடர்ந்து ஆப் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
* மக்களை தவறாக வழிநடத்தும் விதமான செய்திகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தாக குற்றம்சாட்டி உள்ளார்.
* மைக் பலமுறை ஆப் செய்யப்பட்டதால் தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
* 12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாக கூறுவது உண்மைக்கு வெகு தொலையில் உள்ளது.
* பெண்கள் பாதுகாப்பு பிரச்சனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
* போதைப்பொருள் கலாச்சாரம் சர்வ சாதாரணமாக ஆளுநர் உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
* அரசு கொடுத்த உரையில் ஏராளமான ஆதாரமற்ற கூற்றுகள், தவறான அறிக்கைகைள் இருந்ததால் வாசிக்கவில்லை.
* பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாததால் கிராம ஊராட்சிகள் செயலிழந்துள்ளதால் மக்களின் ஜனநாயக உரிமை மறுப்பு.
* உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது அரசியலமைப்புக்கு எதிரானது.
* நான் வாசிக்க வேண்டிய உரையில் பெண்களின் பிரச்சனைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
* பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் 55% பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்துள்ளது.
* தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் தற்கொலை.
* தேசிய கீதம் இசைக்கப்படாமல் மீண்டும் அவமதிக்கப்பட்டது. இதனால் அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.