வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மத்திய-கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மத்திய மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அது நாளை (22-ந்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். வருகிற 23-ந்தேதி காலை அது வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நெருங்கும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.