X

எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் ஏபிபி (ABB) குளோபல் எக்ஸலன்ஸ் ரோபோட்டிக்ஸ் மையம் ஆரம்பம்

எஸ்ஆர்எம் குழுமத்தின் ஒரு அங்கமான ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏபிபி ரோபோட்டிக்ஸ் நிறுவனம் சார்பாக ‘குளோபல் எக்ஸலன்ஸ் சென்டர் ஃபார் ரோபோட்டிக்ஸ்’ தொடங்கப்பட்டுள்ளது. ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் உலகளவில் முன்னணி வகிக்கும் ஏபிபி நிறுவனம், இந்தியாவில் அமைத்துள்ள முதல் மையம் இதுவே; மேலும், உலகளவில் ஏபிபி ரோபோட்டிக்ஸ் நிறுவனம் அமைத்துள்ள மூன்றாவது மையம் என்ற பெருமையையும் இது பெறுகிறது.

இந்த ஏபிபி ரோபோட்டிக்ஸ் – எஸ்ஆர்எம் ஈஸ்வரி குளோபல் எக்ஸலன்ஸ் மையத்தில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோட்டிக் சிஸ்டம்கள் மற்றும் நுண்ணறிவுமிக்க தானியக்க ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3டி பின் பிக்கிங், பேலட்டைசிங், ஸ்பாட் மற்றும் ஆர்க் வெல்டிங் செல்கள், சேவை மற்றும் பராமரிப்பு அலகுகள், மற்றும் வி.ஆர்/டிஜிட்டல் சிமுலேஷன் செல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சுயாதீன மொபைல் ரோபோக்கள், ஜெனரேட்டிவ் ஏ.ஐ, விஷன் சிஸ்டம்ஸ், ஐஓடி (IoT), பிஎல்சி (PLC) ஆட்டோமேஷன், டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி தீர்வுகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்ததாக இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், மற்றும் துணைத் தலைவர் திருமதி. கீதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த மையத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. ஏபிபி ரோபோட்டிக்ஸ் தலைவர் திரு. சுப்ரதா கர்மாகர், ஆதித்யராம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஆதித்யராம், அதானி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி திரு. அன்பு ஜெயபாலன், ஃப்ரோனியஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் திரு. விஸ்வநாத் காமத், எம்பெயுஆர் சிஸ்டம்ஸ்-ன் பொறியியல் துறை தலைவர் திரு. பாஸ்கர் காஞ்சி, யுனிலீவர் (தெற்காசியா) பொது மேலாளர் திரு. ராம் பதௌரியா, அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி திரு. மீனாட்சி சுந்தரம், டிவிஎஸ் நெக்ஸ்ட்-ன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வினோத் கிருஷ்ணன், வீல்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் திரு. ஸ்ரீவத்ஸ் ராம் மற்றும் த்வனி குழும நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி. சுஜாதா சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து இந்த மையத்தை தொடங்கி வைத்தனர்.

ஆராய்ச்சி, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதற்கான ஒரு மையமாக செயல்படும் நோக்கத்தோடு இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்திரவியல் முதல் கணினி அறிவியல் வரை பல்வேறு பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளில் நேரடி அனுபவத்தை இம்மையம் வழங்கும்; தொழிற்சாலைகளுக்கான ஆட்டோமேஷன் (தானியக்க) தீர்வுகளை உருவாக்கவும், புதிய தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கவும் சிறந்த வாய்ப்புகளை மாணவர்களுக்கு இது ஏதுவாக்கும்.

நிறுவப்பட்டுள்ள இம்மையம், ஆலோசனை சேவை மற்றும் தொழிலகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு கூட்டாண்மைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான புதிய கதவுகளைத் திறக்குமென்று நம்பப்படுகிறது. மேலும், முன்கணிப்பு பராமரிப்பு, விநியோக சங்கிலி வலையமைப்பில் தானியக்கம், எம்படட் சிஸ்டம்கள் மற்றும் மேம்பட்ட ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகளில் புதிய முன்னேற்றங்களுக்கும் இது வழிவகுக்கும்.

இது குறித்து டாக்டர் சிவக்குமார் கூறுகையில், “மாணவர்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுக்காக இந்த குளோபல் எக்ஸலன்ஸ் மையத்தை நிறுவி தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மையத்தை எங்கள் கல்லூரியில் அமைத்ததற்காக ஏபிபி ரோபோட்டிக்ஸ் நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். ஏபிபி ரோபோட்டிக்ஸ் மற்றும் ஈஸ்வரி கல்லூரி இடையிலான இந்த கூட்டணி, இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வித்துறையில் ஒரு சிறந்த முன்னோடித்துவ மாதிரியாகும். மேற்கத்திய நாடுகளில் மட்டுமே இதுவரை பெருமளவில் காணப்பட்ட மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும், திறன் அம்சங்களையும் இந்த மையம் நம் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

“இந்த மையம் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஆதாரவளங்கள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளுக்கான அணுகல் வசதியை வழங்கும். மேலும், இளங்கலை பட்டப்படிப்பு அளவிலேயே பல்வேறு துறைகள் சார்ந்த ஆராய்ச்சிகளை இது ஊக்குவிக்கும். இதனால் மாணவர்கள் முனைவர் பட்டம் (Ph.D) வரை காத்திருக்காமல், தங்கள் கல்லூரிப் படிப்பின் தொடக்கத்திலேயே ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும். இந்த அணுகுமுறை மாணவர்களின் பகுப்பாய்வு சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதோடு, அவர்களின் யோசனைகளை நிஜ உலக பயன்பாடுகளாகவும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகவும் மாற்ற உதவும்”.

திரு. சுப்ரதா கர்மகார் கூறியதாவது: “ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியக்கமாக்கல் ஆகியவை உற்பத்தி துறையை புரட்சிகரமாக மாற்றி வருகின்றன. அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு அளவுகளைக் கொண்ட தொழிலகங்கள் இந்த நவீன தொழில்நுட்பங்களை தங்களது உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்துவது அதிவேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உற்பத்தி மிக வலுவாக முன்னுரிமைப்படுத்தப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இத்தொழில்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக நாங்கள் இருப்பதால், வளர்ந்து வரும் இந்த துறையில் பொறியியல் மாணவர்கள் இத்திறன்களைக் கொண்டவர்களாக ஆவதற்கு ஏதுவாக்குவது எமது பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். தொழில்துறையின் தேவைகளுக்கு தீர்வுகளை உருவாக்க வெவ்வேறு துறைகளுக்கு இடையிலான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், அதிக மதிப்புள்ள பணிகளை மாணவர்கள் பெறுவதை இதன் மூலம் நாங்கள் சாத்தியமாக்குவோம். இந்த பின்னணியில், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்திற்கு மாணவர்களுக்கும், தொழில்துறையினருக்கும் அணுகல் வசதியை வழங்குகின்ற எமது குளோபல் எக்‌ஸலென்ஸ் சென்டரை நிறுவி, தொடங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.”

ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 400-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் செக்யூரிட்டி, ரோபோட்டிக்ஸ் போன்ற பல்வேறு துறைகளில் இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை இக்கல்லூரி வழங்குகிறது; மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியுடன் நல்ல வேலைவாய்ப்புகளையும் ஏதுவாக்கும் இக்கல்லூரி, திறனும் பொறுப்புமிக்க நபர்களாக மாணவர்கள் முழு வளர்ச்சியடைவதில் கவனம் செலுத்துகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தனது பலத்தையும், திறன்களையும் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு தானியக்க செயல்பாடுகளுக்கு ஆலோசனை சேவைகளையும் வழங்கி வருகிறது.