X

அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்

ஈரான் மீதான இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் ஒரு வாரத்தை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி வருகிறது.

இந்நிலையில் அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார். அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தாது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

ஈரானின் இடைக்காலத் தலைமை கவுன்சில் நேற்று இந்த முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்,” என்று அவர் அரசு தொலைக்காட்சியில் ஆவேசமாகப் பேசினார். ஈரான் அதிபர் அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் படிப்படியாக வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதற்கிடையே ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து வருகிறது. இன்று இஸ்ரேல் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீப்பிடித்து கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு தாக்குதலால் ஈரானில் இதுவரை 1000-திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரான் தொடக்க பள்ளி மீதான அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த 160 சிறுமிகளும் அடங்குவர்.