மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நீதிமன்றம் உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டுமே மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தன. உத்தரவைச் செயல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இருப்பினும், சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பக்தர்களைக் கைது செய்து பலத்த போலீஸ் பாதுகாப்பைப் போட்டிருந்தது.
இந்நிலையில், மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்குப் பதிலாக, ஆண்டுதோறும் தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டுமே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருவதால், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.