ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா (Dimona) மற்றும் அராத் (Arad) நகரங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி விழுந்த இந்த ஏவுகணைகளால் குடியிருப்பு கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்; அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அணுசக்தி ஆய்வு மையம் அமைந்துள்ள டிமோனா பகுதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, ஈரானின் நட்டான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலே காரணம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, “இது நமது எதிர்காலத்திற்கான போரில் மிகக் கடினமான இரவு” என்று குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீது அனைத்து முனைகளிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.