ஈரான் அணுசக்தி நாடாகிவிட்டால், அது கடும் ஆபத்தாகிவிடும் என்று அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. ஆனால், ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்கா- ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில்தான் ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் கோபம் அடைந்த ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா பகுதகளில் உள்ள எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் உலகமெங்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீதான தாக்குதல் எதற்காக என்று நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு கூறியதாவது:-
ஈரான் புதிய தளங்கள் மற்றும் புதிய இடங்கள், பூமிக்கடியில் பதுங்கு குழி கட்ட தொடங்கியுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம், அணுஆயுத திட்டம் ஆகிவற்றை உருவாக்கிவிடுவார்கள். இதனால் தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் தான் தற்போது நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்.
கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் அணுஆயுத தளங்கள் மற்றும் அவர்களுடைய பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அவர்கள் புதிய தளங்களை கட்ட தொடங்கினார்கள்.
இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.