X

டெல்லியில் பத்திரிகையாளர்கள் கைது – இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

டெல்லியில் தலைமைக் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமாவைக் கோரி நடைபெற்ற போராட்டத்தைச் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களைக் காவல் துறை கைது செய்து, அச்சுறுத்தி, சாதனங்களைப் பறிமுதல் செய்த சம்பவத்திற்குப் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் (Press Club of India) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 10 அன்று டெல்லி காவல் துறை நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்தபோது, பிரஸ் கார்டுகளை வெளிப்படையாகக் காட்டியபோதிலும் பரஞ்சாய் குகா தாகுர்தா உட்பட த க்விண்ட், த வயர், ஸ்க்ரோல், ரிப்போர்ட்டர் டிவி, நவபாரத் டைம்ஸ், நியூஸ்லாண்ட்ரி ஆகியவற்றின் செய்தியாளர்கள் காவல் பேருந்துகளில் ஏற்றிச் சத்ரசால் அரங்கம் மற்றும் சாணக்கியபுரி காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர்களின் அலுவல் ரீதியிலான போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பிஐபி (PIB) அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற காவல் துறையின் விதிகள் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களில் பலரிடம் பிஐபி கார்டு இல்லை என்றாலும், சட்டப்படி அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அமைப்புகள், கைது செய்யப்பட்ட அனைத்துப் பத்திரிகையாளர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

மேலும், பிரஸ் கார்டைப் பார்த்தும் கைது செய்த காவலர்கள் மீது விசாரணை நடத்தி டெல்லி காவல் துறை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், போராட்டங்களைச் செய்தி சேகரிப்பதைத் தடுக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சங்கீதா பரூவா பிஷாரோடி, பொதுச்செயலாளர் அப்சல் இமாம் மற்றும் இந்தியப் பெண்கள் பிரஸ் கார்ப்ஸ், டெல்லி யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், கேரளா யூனியன் ஆஃப் வொர்க்கிங் ஜர்னலிஸ்ட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.