ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை, அரிய பிறவி கணையக் கோளாறு காரணமாக நாள்பட்ட கணைய அழற்சியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த 12 வயது சிறுமிக்கு, மிகவும் சிக்கலான ரோபோடிக் கணைய சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சிறுமிக்கு செய்யப்படும் முதல் ரோபோடிக் ஃப்ரேஸ் சிகிச்சை என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது. குழந்தைகளுக்கு குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட கணைய அறுவை சிகிச்சையில் இதுவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
கருவளர்ச்சியின் போது கணையக் குழாய்கள் இயல்பாக இணையாமை எனப்படும் ‘கணையப் பிளவு’ என்ற பிறவிக் குறைபாட்டினால், இந்தச் சிறுமி பல ஆண்டுகளாகக் கடுமையான வயிற்று வலி மற்றும் கணைய அழற்சியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இந்த அசாதாரண அமைப்பினால் கணைய நீர் வெளியேறுவது பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியான வீக்கம், கணையப் பாதிப்பு, கடுமையான வலி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவசியம் இந்த சிறுமிக்கு ஏற்பட்டது.
பல ஆண்டுகளாக பல்வேறு எண்டோஸ்கோபிக் சிகிச்சைகள் மற்றும் கணையக் குழாய் ஸ்டென்டிங் செயல்முறைகள் செய்யப்பட்ட போதிலும், கணைய அழற்சியின் பாதிப்பு சிறுமிக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. நோய் முற்றி நாள்பட்ட தீவிர கணைய அழற்சியாக இது மாறியதால், காவேரி மருத்துவமனையின் பன்முக மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கிய நிபுணர்கள் குழு, இச்சிறுமிக்கு நிரந்தர நிவாரணம் அளிப்பதற்காக அறுவைசிகிச்சை செய்யப் பரிந்துரைத்தனர்.
சிறுமிக்குச் செய்யப்பட்ட இந்த ‘ரோபோடிக் ஃப்ரேஸ் செயல்முறை’, கணைய அறுவை சிகிச்சைகளிலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலான, அதிக நிபுணத்துவம் அவசியப்படும் ஒன்றாகும். நோய் பாதிப்புடன், வீக்கமடைந்த கணையத் திசுக்களை அகற்றுவதுடன், கணைய நீர் இயல்பாகச் செல்வதற்காக கணையத்திற்கும் குடலுக்கும் இடையே ஒரு வடிகால் பாதையை உருவாக்குவதும் இந்த சிகிச்சை செயல்முறையில் இடம்பெற்றிருந்தது.
கணையத்தின் மென்மையான அமைப்பு, அறுவைசிகிச்சை செய்வதற்கு மிகச்சிறிய இடம், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் குழாய்களைச் சுற்றி நுணுக்கமாக சீரமைக்க வேண்டிய அவசியம், ஆரோக்கியமான கணையத் திசுக்களைப் பாதுகாக்கத் தேவையான துல்லியம் ஆகிய காரணங்களால், ஒரு குழந்தைக்கு இந்த அறுவைசிகிச்சையை ரோபோடிக் முறையில் செய்வது உண்மையிலேயே மிகவும் சவாலானதாகும்.
மேம்பட்ட டா வின்சி ரோபோடிக் மூலம் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது, சிக்கலான சீரமைப்பு அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு மேம்பட்ட 3D பார்வை வசதி, கை நடுக்கத்தைத் தடுக்கும் தொழில்நுட்பம், உயர்தர துல்லியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட லாவகத்தை வழங்குகிறது.
ரோபோடிக் செயல்முறைகளில் அனுபவம் வாய்ந்த, வயிற்று உறுப்பு மாற்று மற்றும் HPB அறுவை சிகிச்சை பிரிவின் மருத்துவத் தலைவர் டாக்டர். செந்தில் ஞானசேகரன், மருத்துவ குடல்-இரைப்பை பிரிவின் தலைவர் டாக்டர். பியூஷ் பவானே ஆகியோருடன் இணைந்து இச்சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
ஒரு பெரிய கணைய அறுவை சிகிச்சையில் மிக முக்கிய அம்சமான ‘குறைந்தபட்ச ரத்த இழப்பு’ என்ற குறிப்பிடத்தக்க சாதனையுடன் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. வழக்கமான திறந்த நிலை அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், ரோபோட்டிக் உதவியுடனான அறுவைசிகிச்சைக்குப் பிறகு மிகக் குறைந்த வலியே சிறுமிக்கு இருந்தது. மேலும், சீராக குணமடைந்த அச்சிறுமி, அறுவைசிகிச்சை முடிந்து ஆறாவது நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இச்சிகிச்சை குறித்து டாக்டர் செந்தில் ஞானசேகரன் கூறுகையில்: “குழந்தைகளுக்கு நாள்பட்ட கணைய அழற்சி ஏற்படுவது அரிதான பாதிப்பாகும். தொடர்ச்சியான வலி, அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நீண்டகால கணையப் பாதிப்பு ஆகியவற்றால் இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாகப் பாதிக்கலாம். கணைய சீரமைப்பு அறுவை சிகிச்சைகளிலேயே மிகவும் சிக்கலான ஒன்றான ஃப்ரேஸ் செயல்முறையை ஒரு குழந்தைக்கு ரோபோடிக் முறையில் செய்ய அசாதாரண துல்லியமும், மருத்துவ நிபுணத்துவமும் தேவை. குறைந்தபட்ச ஊடுருவல் அணுகுமுறையின் மூலம், மிகவும் நுணுக்கமான அறுவை சிகிச்சை மற்றும் சீரமைப்பைச் செய்ய டாவின்சி ரோபோடிக் தளம் எங்களுக்கு உதவியது. இதனால் இச்சிறுமிக்கு குறைந்த வலி, சிறிய தழும்புகள், குறைந்த ரத்த இழப்பு மற்றும் விரைவாகக் குணமடைதல் ஆகியவை சாத்தியமானது,” என்றார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “இரைப்பை-குடல் அறுவைசிகிச்சையில், கணைய அறுவை சிகிச்சையே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமானது என்பதால், குழந்தைகளுக்கு ரோபோடிக் கணைய சீரமைப்பு அறுவைசிகிச்சை நிகழ்வு உலக அளவிலேயே மிகவும் அரிதானது. இந்த சிகிச்சையின் வெற்றி, காவேரி மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் கல்லீரல்கணைய அறுவைசிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சை செயல்முறையில் வளர்ந்து வரும் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மேம்பட்ட ரோபோடிக் தொழில்நுட்பமானது, பன்முக நிபுணத்துவத்துடன் இணையும் போது, அறுவைசிகிச்சை வலிகளைக் குறைத்து, நீண்ட கால பலன்களை மேம்படுத்தி, குழந்தைகள் விரைவாகக் குணமடைய எவ்வாறு உதவும் என்பதை இந்த வெற்றிகர சிகிச்சை நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பன்முக மருத்துவ நிபுணத்துவத்தின் ஆதரவுடன் கூடிய உயர்தர சிறப்பு சிகிச்சைகளை வழங்கி வரும் காவேரி மருத்துவமனை, தென்னிந்தியாவில் மேம்பட்ட ரோபோடிக் இரைப்பை-குடல், HPB, உறுப்பு மாற்று மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சைகளுக்கான முன்னணி மையங்களில் ஒன்றாகத் தன் நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.